ஸ்ரீநகர்:
நிபந்தனை பத்திரங்களில் கையெழுத்திட்டால் மட்டுமே சிறையிலிருந்து விடுவிப்போம் என்று, காஷ்மீர் தலைவர்களுக்கு மத்திய பாஜக அரசுநிர்ப்பந்தம் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தையும், அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளையும் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய பாஜக அரசு பறித்தது. மேலும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த மோடி அரசு, இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு விடுவார்கள் என்ற அச்சத்தில்- காஷ்மீரின்முன்னாள் முதல்வர்கள் பரூக் அப் துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுச் சிறையில் அடைத்தது.
நூறு நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானது;சிறையில் இருக்கும் காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தும் மத்திய அரசு தொடர்ந்து அராஜகமாக நடந்து வருகிறது.இதனிடையே, காஷ்மீர் விவகாரம் குறித்து ஊடகத்திடமோ, மக்களிடமோ பேச மாட்டோம் என பத்திரங்களில் கையெழுத்திட்டுக் கொடுத்தால்,வீட்டுச் சிறையிலிருந்து விடுவிப்பதாக, அரசியல் தலைவர்களிடம் மோடிஅரசு பேரம் நடத்தியதாகவும், ஆனால்,மோடி அரசின் இந்த நிபந்தனைகளை ஏற்க காஷ்மீர் தலைவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.