ஹைதராபாத்தில் மருத்துவக் கல்லூரி ஒன்றில் தேர்வில் தேர்ச்சியை அளிக்க மாணவர்களிடம் லஞ்சம் பெற்றதாக கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹைதராபாத்தில் இயங்கி வரும் ஓஸ்மானியா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் தேர்வில் தேர்ச்சியை அளிக்க பொதுமருத்துவத் துறை தலைவரும், மருத்துவ பேராசிரியருமான பி.பாலாஜி லஞ்சம் கேட்பதாக புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு காவல்துறை பேராசிரியர் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகத்தின் ஆய்வு நடத்தினர். அதில் மாணவர்களிடம் லஞ்சம் பெற்றதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2ம் தேதி பேராசிரியர் சில மாணவர்களிடம் தேர்வில் நீங்கள் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி அளிக்க ஒவ்வொரு மாணவரிடமும் 50 ஆயிரம் பணம் அளிக்குமாறு கேட்டுள்ளார். பின்பு மாணவர்கள் அவருக்கு பணத்தை அளித்து ஆதாரத்தை திரட்டியுள்ளனர். பின்பு பேராசிரியர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.