ஹமீர்பூர்:
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பவுதியா கிராமத்தைச் சேர்ந்த கல்கு பிரஜாபதி (23) 10-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுவிட்டது. ஏப்.28-ஆம் தேதி திருமணம் என உறுதி செய்து அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டுவிட்டன. கொரோனா பரவலால் திருமணம் குறிப்பிட்ட தேதியில் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் மணமக்கள் வீட்டினர் இருந்தனர். திருமணம் குறித்த தேதியில் நடைபெறவேண்டுமென மணமகள் வீட்டார் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் திருமணத்திற்காக பிரஜாபதி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியைக் கேட்டிருந்தார். அது கடைசி வரை கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் தனிநபராகச் சென்று நிச்சயித்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். தொற்றுநோயிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாயை கைக்குட்டையால் மூடிக்கொண்டு ஜீன்ஸ் பேன்ட்- டி-ஷர்ட்டில்
தனது பவுதியா கிராமத்திலிருந்து மஹோபா மாவட்டத்தில் புனியா கிராமத்தில் உள்ள தனது மணமகள் ரிங்கியின் வீட்டிற்கு சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்தார். மணமகள் ரிங்கியின் வீட்டை அடைந்தார். ஏப்.28-ஆம் தேதி அங்குள்ள பாபா தியானிதாஸ் ஆசிரமத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் பிரஜாபதி தனது சைக்கிளின் பின்னால் ரிங்கியை அமரவைத்துக்கொண்டு மீண்டும் சொந்த ஊர் திரும்பினார்.
திருமணம் முடிந்துவிட்டாலும் ஊரடங்கு முடிந்த பின் உறவினர்கள், கிராமத்தினருக்கு விருந்தளிக்க பிரஜாபதி முடிவு செய்துள்ளார். திருமணம் குறித்து அவர் கூறுகையில், " நான் ஒரு மறக்கமுடியாத திருமணத்தை விரும்பினேன், ஆனால் இதுபோன்ற சூழ்நிலைகளில் நடக்கும் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை. மேலும் எனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். குடும்பத்திற்கு சமைக்க யாரும் இல்லாததால் திருமணம் குறித்த தேதியில் நடைபெற்றது" என்றார்.