விழுப்புரம். டிச. 7- விழுப்புரத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மாநிலத் தலைவர் ஏ.லாசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது, “நூறு நாள் வேலை என்பது இந்திய நாடு முழுமைக்கும் சட்டத்தின் அடிப்படையில் அமல்படுத்தாமல் எந்திரம் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் நடக்கிறது. அகில இந்திய அளவில் நூறு நாள் வேலை தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. அதிலும் தமிழகத்தில் அதிகமாக நடக்கிறது” என்றார்.
வாரம், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை கூலி வழங்காமல் மூன்று, நான்கு மாதங்கள் கூலி வழங்காமல் நிலுவை வைத்து உள்ளனர். இதனை எதிர்த்து தீபாவளிக்கு முன்பு போராட்டம் நடத்திய சில இடங்களில் நிலுவை கூலி வழங்கினர். இன்னும் பெரும்பாலான இடங்களில் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். வெங்காய விலை ரூ.200 நெருங்கிவிட்டது. ஆந்திராவில் அரசே கொள்முதல் செய்து ரூ.25 விற்பதுபோல் தமிழகத்தில் நியாயவிலைக்கடை கடைகளில் வெங்காயம் ஏன் விற்பனை செய்யவில்லை? எந்த முயற்சியும் எடுக்காமல் தனியார் கொள்ளைக்கு அனுமதி வழங்கியுள்ளது என்று தமிழக அரசு மீது குற்றம் சுமத்தினார்.