தீண்டாமை நோயை வேரறுப்போம்
பி.சீனிவாசராவ், களப்பால் குப்பு போன்ற செங்கொடி இயக்கத் தியாகிகள், தலைவர்கள் களமாடிய மண்ணில் இந்த மாநாடு நடப்பதும், மாநாட்டில் எனக்கு வரவேற்புக்குழுத் தலைவராக வாய்ப்புக் கிடைத்ததையும் பெருமையாகக் கருதுகிறேன். இந்திய தற்பொழுது தேசிய இனங்களின் சிறைக்கூடமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு தேசம், ஒரே நேசன் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். எப்பொழுது என்றால் அது சாதியற்ற சமூகமாக இருக்கும் போது. சாதியம் குறித்து தமிழகம் முழுவதும் பரந்துபட்ட உரையாடலை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வருகிறது. தீண்டாமை குறித்த உரையாடல் ஆதிக்க சக்திகளின் குடும்பங்களிலும் நடத்தப்பட வேண்டும். கலைத்துறையிலும், அரசியல் தளத்திலும் உங்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். கடைசிவரை ஒரு இடதுசாரி இயக்கத் தோழனாகவே இருக்க விரும்புகிறேன். தீண்டாமை நோய் எந்த வடிவத்தில் வந்தாலும் தீண்டாமை நோயை வேரறுப்போம்.
இயக்குநர் ராஜூ முருகன்
டிஜிட்டல் இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலாளர்கள்
அருந்ததிய மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சென்னையில் உள் இடஒதுக்கீட்டை ஆதரித்து நடத்திய பேரணி தான் காரணமாக அமைந்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கை கொடுக்கவும், வலு சேர்க்கவும் ஒரு அமைப்பு உள்ளது என எங்களுக்கு உத்வேகத்தைத் தந்தது. பாஜக இரண்டாவது முறையாக அசுர பலத்துடன் ஆட்சியை கைப்பற்றி, குறைந்த நாட்களிலேயே 38-க்கும் மேற்பட்ட மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. காஷ்மீர், முத்தலாக் பிரச்சினை, தேசிய பாதுகாப்பு சட்டம் என எந்த மசோதாவும் விரிவாக விவாதம் நடத்தப்படாமலேயே நிறைவேற்றியுள்ளனர். சாதியை ஒழிக்க வேண்டும் எனில் அது எளிதான காரியமா. சாதி எங்கும் ஒழிந்துள்ளதா... இல்லை இன்னும் கூர்மையாக வளர்ந்துள்ளது. நாய்களில் சாதி இல்லையா... அது போல் மனிதர்களிலும் சாதி உண்டு என நீதிபதிகள் கலந்து கொள்ளும் மாநாட்டிலேயே பேசக்கூடிய துணிவை தந்துள்ளது. கோட்சேவுக்கு 100 இடங்களில் சிலை வைப்போம் என சொல்லும் தைரியம் எங்கிருந்து வந்தது. ஆர்.எஸ்.எஸ் பின்புலம் தான் காரணம். நாட்டை ஒரே தேசமாக இந்து தேசமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சாதியத்தை ஒழிக்க அனைவரும் ஓரணியில் திரண்டு, வியூகம் வகுத்து அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். டிஜிட்டல் இந்தியா என்று சொல்லிக் கொள்ளும் இதே நேரத்தில் தான் மலம் அள்ளும் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கே செல்கிறது. சாதி ஒழிப்பை தீண்டாமை ஒழிப்பை அனைவரும் ஒன்றிணைந்து கொண்டு செல்வோம்.
ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான்
என்றும் நிறைந்த கருத்தியல் மார்க்சியம்
ஒடுக்கப்பட்டோருக்கான போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளோம். டாக்டர் அம்பேத்கர் குறித்து மறுவாசிப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தலித் மக்களை உழைக்கும் வர்க்கத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட முடியாது. சாதியை ஒழிக்க கருத்தாலும், கரத்தாலும் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். நாடற்றவர்க்கு நாடு தர வேண்டும் என நூறு ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்தவர் மார்க்ஸ், உலகில் என்றும் நிறைந்த கருத்தியல் கொண்டது மார்க்ஸ், லெனினியம். ஆழ்மனதில் கிடக்கும் சாதித் தோல் உதிர வேண்டும். புத்தம் புதிய மனிதனால் தான் புது உலகம் படைக்க முடியும்.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன்
ஒடுக்கப்பட்டவர் அரசியல் அதிகாரம் பெற வேண்டும்
சாதி ஆணவப் படுகொலைகள் இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாகவே உள்ளன. கச்சநத்தம் மட்டுமல்ல பல இடங்களிலும் படுகொலைகளை பட்டியலின மக்கள் தினசரி சந்தித்து வருகின்றனர். தீண்டாமையை ஒழிப்பது மட்டுமல்ல சாதி ஒழிப்பையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதியும், இடைநிலை சாதியும் ஒன்றோடு ஒன்று இணையக் கூடாது என சனாதன சக்திகள் முன் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி விட்டோம். பட்டியலின மக்களுக்கு எல்லா உரிமைகளும் கிடைத்து விடும் என மோடி சொல்கிறார். தமிழகத்தில் சுதந்திரமடைந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. இத்தனை ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்கு என்ன உரிமை கிடைத்து விட்டது. ஒடுக்கப்பட்டவன் அரசியல் அதிகாரம் பெறுவது தான் சமூக நீதிக்கான தீர்வாகும். பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராட வேண்டும்.
மக்கள் விடுதலைக் கட்சித் தலைவர் த.கா.முருகவேல்ராஜன்
ஐ.நா. வரை எதிரொலிக்க வேண்டும்
ஐ.நா. சபையில் இந்தியாவில் நிகழும் சாதியப் பாகுபாடு குறித்து அறிக்கை வைத்து விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். ஆனால், 2001 முதல் 2017 வரை 92 முறை இதற்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என இந்திய அரசு தலையீடு செய்து வருகிறது. இது குறித்து இடதுசாரி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். உங்களைப் போன்ற தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் நடத்துபவர்களை மனித உரிமை காப்பாளர் என்று 1998-ல் ஐ.நா.சபை பிரகடனப்படுத்தியுள்ளது. உங்கள் பணிகளை தமிழகத்தோடு மட்டும் நிறுத்தி விடாதீர்கள். ஐநா மன்றம் வரை எதிரொலிக்க வேண்டும். தெருக்களில் போராட்டம் நடத்துவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு முக்கியமானது சட்டப் போராட்டமும். தீண்டாமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் பல்வேறு உரிமைகள் உண்டு. நடைமுறைச் செலவுகளைப் பெறுவது உள்ளிட்ட உரிமைகளை நீங்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மனித உரிமை காப்பாளர் ஹென்றி டிபேன்
ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றுவோம்
நாடு சுதந்திரம் அடைந்து 73 ஆண்டுகளை கடந்த பிறகும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னமும் சுதந்திரக்காற்றை சுவாசிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். இதை இந்த சுதந்திர நாளில் பிரதமர் மோடிக்கு சுட்டிக்காட்டும் மாநாடாக இது அமைந்திருக்கிறது. ஆனால் மோடியோ உலக நாடுகளில் பொய்யான செய்திகளை தொடர்ந்து பரப்பி வருகிறார். இந்தியாவில், தமிழகத்தில் சாதியை எப்படி ஒழிக்கப் போகிறோம் என்ற கேள்வி நம் முன்னால் நிக்கிறது. சமூகச் சீர்திருத்தம், அரசியல் சீர்திருத்தம் என ஒட்டுமொத்த அமைப்பு முறையையே மாற்ற வேண்டியிருக்கிறது.தீண்டாமையை, சாதியை வேரறுக்கும் வரலாற்றுக் கடமையில் தமிழ்ப்புலிகள் அமைப்பு தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடன் தொடர்ந்து கரம்கோர்க்கும்.
தமிழ்ப்புலிகள் இயக்கத்தின் தலைவர் நாகை திருவள்ளுவன்
அரசே ஒப்புக் கொள்கிறது...
நாட்டில் 53 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. அதில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குகள் தலித் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு. ஆண்டு தோறும் 5.5 சதவிகிதம் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. பழங்குடியினர் உரிமை பாதுகாப்புச் சட்டம் மிக முக்கியமானது. காவல் நிலையத்தில் சென்று உரிமைகளைப் பெற இச்சட்டம் அங்கீகரிக்கிறது. பிரிவு 15 ஏ-ன் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு காவல்நிலையத்திற்கு உள்ள சென்று உதவ அனுமதிக்கிறது. தமிழ்நாட்டில் 502 கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக அரசே ஒப்புக் கொள்கிறது. பிரிவு 16-ஐ பயன்படுத்தி 502 கிராமங்கள் மீதும் கூட்டு அபராதம் விதிக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழக்குத் தொடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் பயன்படுத்தப்படாத உரிமைகளை பயன்படுத்துவதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும்.
வழக்கறிஞர் சசி பாண்டியன்