சோம்பல் அதிகமில்லாத காலைப் பொழுதுகளில் புதிதாகப் போடப்பட்ட நான்காவது இருப்புப் பாதை வழியாக திருவெற்றியூர் ஸ்டேஷனை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமில்லை. இப்படி காலை வெயிலில் நடப்பதற்கு சற்று மன கெடலும்,சலிப்பு உணர்வு மிகைப்படாமல் இருத்தலும் போதுமானது. ஏழு நிமிடம் கிழக்கு வெயிலில் நனைந்து கொண்டு நடந்தால் பெயிண்ட் உரிந்த மஞ்சள் நிற சிமெண்ட் பெயர் பலகை உங்களை நடைமேடையில் வரவேற்க தவம் இருப்பது போல நின்று கொண்டிருக்கும். ஆனால் பஸ் டெப்போவின் கதை இவ்வளவு கடினமாக இல்லை. வீட்டிலிருந்து முழுமையாக ஒரு நிமிட தொலைவில் டெப்போ வந்துவிடும். ஆனால் என்ன செய்ய திருவொற்றியூரில் இருந்து திருவல்லிக்கேணிக்கு ஒரே பஸ்ஸாக இல்லேயே. முதலில் சென்ட்ரல் நிறுத்தத்திலோ அல்லது மவுண்ட்ரோடு சிம்சன் நிறுத்தத்திலோ இறங்கி பிறகு 32B பிடித்துப் போய் சேர வேண்டும்.
வெயிலில் திரிந்து கொண்டிருப்பது அவளுக்கு அலாதியான விருப்பம் போல! சூரியன் உச்சியில் இல்லை என்றாலும் இந்த நேரத்திற்கு நிழலை தேடாத தலைகளே இல்லை. கருவேலங் காட்டின் காய்ந்துபோன ஒற்றை பனையைப்போல திருவெற்றியூர் என்கிற மஞ்சள் போர்டுக்கு முன்னால் காய்ந்த தலையோடு, டிக்கெட் பரிசோதகரின் எதிர் நடைமேடையில் அந்த மோர் கிழவி நின்றுகொண்டிருப்பார். கண் பார்வை குறைபாடு உள்ளவராகவோ அல்லது தூரத்தில் இருந்து அவரை பார்ப்பவராகவோ நீங்கள் இருப்பீர்களானால் அவர் காலுக்கு கீழே விசித்திரமான உருவில் நாய் ஒன்று படுத்திருப்பதாக நினைத்துக் கொள்வீர்கள். பழக்கப்பட்ட கண்களுக்கு மட்டுமே அது அவ ருடைய மோர் கூடையென தெரியும். அலுவல கங்கள் எல்லாம் தென் சென்னைக்கும் தொழிற் சாலைகள் எல்லாம் வடசென்னைக்கும் என்பது சென்னையின் எழுதப்படாத விதி. வடசென்னை யில் இருப்பவர்கள் எல்லோருமே தொழிற் சாலை வாசிகள் கிடையாது, இங்கும் அலுவலக வாசிகள் பலரும் இறைந்து கிடக்கின்றனர்.
கடிகார முள் போல் அல்லாமல் கண்மாயில் புதிதாக விடப்பட்ட நெடுநாள் கண்ணாடி புட்டி மீனைப் போல எந்தவித நிபந்தனைகளுக்கும் கட்டுப்படாமல் வாழ்க்கை அது தன் இஷ்டத்திற்கு பயணிக்கிறது. அந்தப் பயணத்தில் நாம் எல்லாம் காற்றில் கரையும் புகையாகி போகிறோம். அந்த மோர் கிழவியின் கால்கள் ரயில் வந்து நிற்கும் நடைமேடைகளை நோக்கி சதா அலைந்து கொண்டே இருக்கின்றன. அலுவலகவாசிகள் ஓய்வு ஒழிச்சலின்றி அலுவலகங்களின் இருப்பிடங்களை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது இந்தக் கிழவியின் பிம்பம் தடுக்கி விழுபவர்கள் இவரிடத்தே சொற்ப வாடிக்கையாளர்கள் ஆனார்கள். நடுங்கும் விரல்களுடன் அவர் கொடுக்கும் மோருக்கு அப்படி ஒரு ஊளை மணம் இருந்தது. வெயில் ஏறி போன ஒரு காலைப் பொழுதில் நானும் அவருடைய சொற்ப வாடிக்கையாளர்களில் ஒருவனாகி போனேன். கிழவியை விட வயது குறைந்த நடுத்தர வயது பழவியாபாரி பெண்களின் பரிகாசத்திற்கும், அக்கறையுடன் கூடிய கேலி கிண்டலுக்கும் கிழவி அவ்வப்போது ஆளாவது உண்டு.
வழக்கத்திற்கு மாறான ஒரு பகல் பொழுதில் ரயில் நிலைய நடைமேடையில் அவரைப் பார்க்க நேர்ந்தது. எப்பொழுதும் பழுப்பேறிய கண்களுடன் தென்படுபவர் இன்று உற்சாகமாகவும் சற்றே வயதிற்கு மீறிய சுறுசுறுப்புடனும் காணப்பட்டார். நான் செல்போன் நோண்டுவதை நிறுத்தி அவரை கவனிக்க தொடங்கினேன். பள்ளி முடித்து வீடு திரும்பும் ரெட்டை ஜடை சிறுமியைப் போல தன் இரு கால்களாலும் திருவெற்றியூர் ரயில் நிலையத்தையே அளந்தபடி என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அருகில் வந்து நின்று "மோர் வேணுமா சார்" என்றபடி என் பதிலுக்காக காத்து இருக்காமல் சில்வர் டம்ளரில் வழியும் அளவுக்கு மோர் எடுத்துக் கொடுத்தார். மோரை நான் சீரான இடைவெளியில் விழுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் காலில் எதையோ மிதித்து விட்டதைப் போல நைந்து போய் தைக்கப்பட்ட தனது காட்டன் புடவையை கணுக்காலுக்கு மேலே தூக்கி பாவனை செய்து கொண்டிருந்தார். அவரின் உற்சாகத்துக்கும் வழக்கத்திற்கு மாறான சுறுசுறுப்புக்கும் காரணம் சிவப்பு பட்டி போட்ட ரப்பர் செருப்பாய் மின்னிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இவ்வளவு நெருக்கடியி லும் இவர் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷ மாக எதை குறித்தும் கவலைப்பட்டு கொள்ளாத வராக இருக்கிறார் என எனக்கு பொறாமையாக இருந்தது. எனது பொறாமையின் உச்சமாய் "மோருக்கு நாளைக்கு காசு தரேன்" என வார்த்தையாய் வெளிப்படுத்தினேன். அவரும் பெரிதும் ஏதும் பொருட்படுத்தாதது போல் என்னி டமிருந்து விலகி 'கும்மிடிப்பூண்டி' மார்க்கமாக செல்லும் இரண்டாவது நடைமேடைக்கு, அவரது இரு கால்களாலும் ரயில் நிலையத்தோடு சேர்த்து எனது பொறாமையையும் அளந்தவாறு நடந்து கொண்டிருந்தார். என் தலைக்கு மேலே பலமான இரைச்சலுடன் விமானம் காற்றில் கரைந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் அவரின் உற்சாகம் எங்கிருந்தோ வந்து என்னையும் தொற்றிக்கொண்டது. எனது அலுவலகத்தையும், அதன் பணிச்சுமையும், என்னை கடந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், வந்து சேரவேண்டிய என் காத்திருப்பு ரயிலையும், தாமதம் ஆகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும், மறந்து முற்றாக அந்த மோர் கிழவியை பற்றி யோசிக்கலானேன். அவர் பெயர் என்னவாக இருக்கும்? அவருடைய சிறுவயது எப்படி இருந்திருக்கும்? அவருக்கான லட்சியம் என்னவாக இருந்திருக்கும்? அவரின் நண்பர்கள் யார் யார்? அதில் இப்போது மீதமுள்ளவர்கள் எத்தனை பேர்? இவரைப் பற்றிய அவர்களுடைய சிந்தனை எவ்வாறு இருக்கும்? இவருடைய பிள்ளைகள் என்ன ஆனார்கள்? இவருக்கு குடும்பம் என்று ஒன்று உள்ளதா அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டாளா? இவ்வாறாக சிந்தித்துக் கொண்டிருக்கையில், சென்னை கடற்கரை ரயில் மூன்றாவது நடைமேடையில் 20 நிமிட தாமதத்திற்கு பின் வந்து சேர்ந்தது. பின்பு என்னோடு சேர்த்து என் சிந்தனையும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தை விட்டு மெல்ல நகரத் தொடங்கி வேகம் எடுத்தது.
ஒருநாள் மாலை 7 மணிக்கு திருவெற்றியூர் பஸ் டிப்போ அருகில் மாணிக்கம் நகர் மெயின் ரோட்டுக்கு நேர் எதிரே உள்ள டீக்கடையில், வடசென்னையின் பழைய நாடக கலைஞன் 'தாஸ்' அவர்களை சந்திக்க காத்திருந்தேன். வழக்கமான எங்கள் சந்திப்பு தான் என்றாலும், எனக்கு ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும் போதும் ஆவலாய் இருக்கும். (நாளடைவில் அவர் பேசுவதில் எனக்கு சலிப்பு தட்டினாலும் அவரை "முதல் ஆசிரியர்" நாவலில் வரும் “பழைய குதிரை வீரனாக“ கற்பனை செய்து கொண்டேன்.) சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்த அவர் வந்த வேகத்திலேயே இரண்டு டீ சொல்லிவிட்டு, அவருக்கு சர்க்கரை தூக்கலாக கேட்டு இரண்டு பஜ்ஜியை வாங்கினார். எங்கள் விரல்களில் சிக்கிக் கொண்ட பஜ்ஜியை சுவைத்தோம். பின்பு இருவரும் கடற்கரையை நோக்கி நடைபயணமானோம். என்னுடைய கொஞ்சமும் முதிர்ச்சி இல்லாத சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு அவர் அலட்டிக் கொள்ளாமல் பதிலளித்தவாறு வந்து கொண்டிருப்பார். முன்னாள் எம்எல்ஏ 'கேபிபி சாமியின்' வீட்டை கடந்து மெயின் ரோட்டை அடைந்த உடனே கடலின் அலை ஓசை கேட்கத் தொடங்கிவிடும்.
கடலைப் பார்த்த மாத்திரத்தில் கேள்வி பதில்கள் எல்லாம் பறந்து போய் கடலின் அலையில் சிக்கி மண்ணோடு புதைந்து விடும் இருவருக்கும். புதைத்த இடத்தில் இருந்து தத்துவ ஞானத்தின் செடி அவருக்கு மட்டும் முளைக்க ஆரம்பித்துவிடும். திடீரென குடும்பம் பற்றிய கவலையில் "என் பையன் எவ்வளவு தப்பு பண்ணினாலும் நான் அவன்கிட்டே எதுவுமே கேட்க மாட்டேன். சரியா சொல்லனும்னா அவன் கிட்ட நான் பேசுறதே இல்லை." என முணுமுணுத்துக் கொண்டிருந்தார். நான் "ஏன்?" என ஒற்றை வார்த்தையில் கேட்ட கேள்வி சிறுபிள்ளைத்தனமானது இல்லை என உணர்ந்தவராய் இறுகிய முகத்துடன் இப்படி சொன்னார். என்னுடைய மவுனம் நிச்சயம் அவனை உமையாகும். என சொல்லியவராய் என்னை பார்த்தார். நான் என் கண்களை தூரத்தில் நங்கூரம் இடப்பட்டு மின்னிக் கொண்டிருக்கும் கப்பலை நோக்கி சட்டென திருப்பிக் கொண்டேன். பொருளாதாரத்தில் எளியவரான மோர் கிழவியின் சந்தோஷத்தையும், ஓரளவு பொருளாதார பின்புலத்தில் இருக்கும் நாடகக் கலைஞன் 'தாஸின்' சலிப்பான மனநிலைமையையும் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மனிதர்கள் தான் எத்தனை விதம்!
அடுத்து நான்கு நாட்களாக ரயில் நிலையத்தில் நான் மோர் கிழவியை பார்க்கவே இல்லை. பின்பு சில காரணங்களுக்காக நான் என்னுடைய வேலையை விட வேண்டியதாயிற்று. எனக்கும் ஸ்டேஷனுக்கும் இருந்த தொடர்பையும் கூட... அடுத்தடுத்த நாட்களில் திருவொற்றியூர் பஸ் டிப்போ தான் போக்குவரத்திற்கு ஒரே வழி என விழுந்து கிடக்க வேண்டியதாயிற்று. சரியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு வில்லிவாக்கத்தில் இருக்கும் நண்பனை சந்திக்க ரயில் நிலையம் செல்ல வேண்டி இருந்தது. நான் பார்த்தது நிஜம்தானா? அந்த மோர் கிழவிதான் அது. ஸ்டேஷனுக்கு போய் முட்டும் ரோட்டில் வேப்ப மரத்தடியில் ஒரு நாயோடு சேர்த்து ஒடுங்கி படுத்திருந்தார்.
வெய்யில் அவர் மீது சிவப்பு எறும்புகளை போல ஊர்ந்துக்கொண்டிருந்தது. நான் அவரைக் கடந்து தான் போய்க் கொண்டிருந்தேன். அவரின் இந்த நிலைமைக்கு நான் தான் காரணமா? அவருடைய மற்ற சொற்ப வாடிக்கையாளர்கள் எங்கே போய் தொலைந்தார்கள்..? நான் அவரை கடந்து தானே ஸ்டேஷன் வந்தேன் ஏன் அவரிடம் ஏதும் பேசவில்லை? ஒருவேளை அந்தப் பழைய நாடக கலைஞர் சொன்ன வாக்கியத்திற்கான அர்த்தம் இதுதானா? அந்த வாக்கியம் எதிரொலிக்கத் தொடங்கியது
"என்னுடைய மவுனம் அவனை உமையாக்கும்." "என்னுடைய மவுனம் அவனை உமையாக்கும்." "எங்களுடைய மவுனம் உங்களை நிச்சயம் ஒரு நாள் ஊமையாகும்" என வார்த்தைகள் மாற்றமடைந்து. இரண்டு வாரங்கள் கழித்து பஸ் டெப்போவிற்கு எதிரான டீக்கடையை ஒட்டிய சுவற்றில் மங்கிய சோடியம் வெளிச்சத்தில் புதிதாக ஒட்டப்பட்டு பாதி கிழிந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றில் 'மரியாள் என்கிற மரி' என்ற பெயரோடு சேர்த்து மோர் கிழவியின் உருவப்படமும் காற்றில் அலைந்து கொண்டிருந்தது.
இப்பொழுதும் நான் எப்போதாவது இஞ்சி, கருவேப்பிலை போட்டு மோர் சாப்பிடுவது உண்டு. ஆனால், நான் எவ்வளவு விரும்பியும் எப்போதும் எனக்கு அந்த ஊளை மணம் வந்ததே இல்லை. பழைய நாடகக் கலைஞன் தாஸ் வழக்கத்துக்கு மாறான சுறுசுறுப்புடனும் சற்றே உற்சாகத்துடனும் காணப்படுகிறார் இப்போதெல்லாம்...