tamilnadu

img

மோடி அரசின் முகத்திரையைக் கிழிப்பவர்களாக தமிழக எம்.பி.க்கள்

சேலத்தில் கே.பாலகிருஷ்ணன் பேச்சு

சேலம், டிச.9 - மோடி அரசின் முகத்திரையை கிழிப்பவர்களாக தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் செயல்படுகின்றனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம், பன்முகக் கலாச்சாரத்தை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஞாயிறன்று நடைபெற்ற சிறப்பு மாநாட்டில்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர்,

“காஷ்மீர் மாநிலத்தில் மத்திய அரசின் செயல்பாடு முழுமையாக அந்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பின்னோக்கி அந்த மக்கள் சென்றுள்ளனர். சாதாரண மக்கள் முதல் முன்னாள் முதல்வர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வஞ்சிக்கப்பட்டு வீட்டுக்காவலிலும் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்; இஸ்லாமிய மக்களை முழுமையாக வஞ்சிக்கும் செயலாகவே மதவாத பாஜக காஷ்மீர் விவகாரத்தில் செயல்பட்டுள்ளது” எனச் சாடினார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 9 மாநிலங்களில் காஷ்மீர் போன்ற சிறப்பு அந்தஸ்து உள்ளது. ஆனால் காஷ்மீரில் மட்டும் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியர்கள் இருப்பதால் மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.  “மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் நோக்குடன் குடியுரிமைச் சட்டத் திருத்த மசேதாவை அறிமுகப்படுத்துகின்றனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவில் இலங்கை அகதிகள் உள்ளனர். ஆனால் இன்று வரை அவர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை . இதேபோல் பர்மா உள்ளிட்ட நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு குறிப்பாக அண்டை நாடுகளிலிருந்து வந்த அவர்களுக்கு குடியுரிமை வேண்டும் என நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும்” என்றும் அவர் கூறினார். 

தமிழகத்தின் ஆட்சியாளர்கள் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்களுக்கு துணை நிற்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவை விசாரிக்கும் ரகுபதி விசாரணை கமிஷனில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை ஆஜராகி விளக்கம் தரவில்லை; இதற்கு என்ன காரணம் என அவர் மக்களுக்கு விளக்கம் தரவேண்டும். இந்தியாவில் லஞ்சம் வாங்குவதில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. நீட் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எடப்பாடி அரசு கவலைப்படுவதே இல்லை என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்த துப்பில்லாத அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. என்றுமில்லாத விதமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்துவது இதுவே முதல் முறை. தோல்வி பயத்தில் அதிமுக அரசு இப்படி செய்கிறது. கூட்டுறவு தேர்தலை போல் பல்வேறு முறைகேடுகளை நடத்தி அதிமுகவினர் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாக வர இந்த திட்டத்தை தீட்டி உள்ளார்கள் என்றும் அவர் சாடினார்.