கும்பகோணம்:
கும்பகோணம் ஆய்வு மாணவி தற்கொலை முயற்சிக்கு காரணமான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.கும்பகோணம் அரசுகலைக் கல்லூரி மாணவி கௌசல்யாவின் ஆய்வறிக்கையில் கையொப்பமிடாமல் விலங்கியல் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தொடர்ந்து அலட்சியப்படுத்தினார். அதன் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி கௌசல்யா தற்கொலைக்கு முயற்சித்து விஷம் அருந்த காரணமான பேராசிரியர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திமாணவர்கள் வியாழனன்று போராட்டம் நடத்தினர்.
தேர்வு ரத்து - விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த அகமதிப்பீடு தேர்வை ரத்து செய்து திடீரென்று வெள்ளி முதல் இரு தினங்கள் கல்லூரிக்கு விடுமுறை என கல்லூரி முதல்வர் அறிவித்தார்.பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்கு விடுமுறை அறிவித்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுமுறை என்ற போதிலும் பெருந் திரளான மாணவர்கள் கல்லூரி வாசல் முன்பு அணி வகுத்தனர். ஆய்வு மாணவிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 2-வது நாளாகபோராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர் ராஜ் தலைமையில்மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரவிந்த்சாமி தெரிவித்ததாவது, மாணவி கௌசல்யாவின் ஆய்வறிக்கையில் கையெழுத்திடாமல் மன உளைச்சலை ஏற்படுத்திய பேராசிரியர் ரவிச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கல்லூரிமுதல்வர், அந்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் கல்லூரிக்கு இரண்டுநாள் விடுமுறை அளித்துள்ளார். இதனை இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.