குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்
சென்னை, செப்.1- தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, கோவை, திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட ரீதியாக நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்து பொதுப் பணித்துறை மாதந்தோறும் அரசுக்கு அறிக்கை அளித்து வருகிறது. இதில் தரைமட்டத்திலிருந்து கிணறுகளில் நீர்மட்டம் எத்தனை மீட்டர் ஆழத்தில் இருக்கிறது என கணக்கிடப்பட்டு அறிக்கை அனுப்பப்பட்டு வருகிறது. இதன்படி ஆகஸ்டு மாத நிலவரத்துக்கான நிலத்தடி நீர்மட்டம் ஒப்பீடு பட்டியல் அறிக்கை தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர், நாமக்கல், தருமபுரி, கோவை, திண்டுக்கல் உள்பட 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் 3.52 மீட்டர் குறைந்துள்ளது. தற்போது இம்மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் 14.65 மீட்டராக உள்ளது. நாமக்கல்லில் நிலத்தடி நீர் 14.32 மீட்டராகவும், தர்மபுரியில் 14.29 மீட்டரும், கோவையில் 14.28 மீட்டராகவும் குறைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை இதுவரை போதிய அளவில் பெய்யவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் 59 சதவீதம், நாமக்கல்லில் 48 சதவீதம், மதுரை மற்றும் திருச்சியில் 39 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதை கண்காணித்து வரும் மத்திய ஜல்சக்தி துறையின் செயலாளர் சிங், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சண்முகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மழை நீரை சேமிக்க கவனம் செலுத்த வேண்டும். நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்ய தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதற்காக செயலிழந்த மற்றும் கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் குழாய் கிணறுகள் ஆகியவற்றை பயன்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு தேவையான வழி முறைகளை வழங்குமாறு வலியுறுத்தப் பட்டுள்ளது. இதேபோல் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய ஜல்சக்தி துறை சார்பில் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் மத்திய கேபினட் செயலாளரும் இதுதொடர்பாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். ஏற்கனவே ஜல்சக்தி துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு பணிகளுக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அதன்படி தமிழ்நாட்டுக்கு 26 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் இரண்டு முறை வந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வருகிற முதல் வாரத்தில் மீண்டும் அதிகாரிகள் வருகை தர உள்ளனர்.