‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்தால் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதாம்
சென்னை,செப்.4- பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் வகையில் மத்திய பாஜக அரசு அமல்படுத்தவுள்ள ‘ஒரே நாடு ஒரே ரேசன்’ திட்டத்திற்கு மக்களும் எதிர்க்கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் இணைவதால் தமிழக மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக் கூறியுள்ள தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மக்களைப் பாதிக்கும் பாஜக அரசின் திட்டத்திற்கு வக்காலத்து வாங்குகிறார் என்று அரசியல் கட்சியினர் சாடியுள்ளனர். சென்னை போரூரில் புதனன்று மத்திய கூட்டுறவு வங்கியின் 70-வது கிளை திறப்பு விழா நிகழ்ச்சிக்குப் பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் தமிழகம் இணைவதில் எந்த தவறும் இல்லை. இதனால் தமிழக மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது.மேலும், இந்த திட்டத்தில், ஒருவர் எங்கு பொது விநியோக பொருட்கள் வாங்கினாலும், அவர்களது மாநிலத்தில் உள்ள பொது விநியோக சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் பொருட்கள் வழங்கப்படும். வெளிமாநிலத்தவரின் குடும்ப அட்டை தகவல்கள் ஆன்லைன் மூலம் மத்திய தொகுப்பிற்கு அனுப்பி, அதற்கு ஏற்றாற் போல அரிசி பெற்றுக்கொள்ளப்படும் என்பதால் தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படாது. தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதை பாராட்டி மத்திய அரசின் பாராட்டு சான்றிதழையும் முப்பது கோடி ரூபாய் ஊக்கத்தொகையையும் தமிழகம் பெற்றுள்ளது” என்று தெரிவித்தார்.
கடும் பாதிப்புதான் ஏற்படும்
ஆனால் உண்மையில் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று பல தரப்பினரும் கூறுகின்றனர். ரேசன் கடை ஊழியர்கள் கூட இதை உறுதி செய்கின்றனர். இதுகுறித்து ரேசன் கடை ஊழியர்களில் ஒருவரான சுப்பிரமணி என்பவர் கூறுகையில், ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் மக்களுக்கு கடும் பாதிப்புதான் ஏற்படும்; ஏற்கனவே மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டுள்ளது; ஏற்கெனவே உணவு பாதுகாப்புச் சட்டத்தால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால் பொருட்கள் வெட்டப்படும் நிலை உருவாகலாம் என்று தெரிவித்தார்.