tamilnadu

img

விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் அடித்தட்டு மக்களுக்கு இல்லையா?

புது வரலாறே,

புறநானூறே, இனம் மறக்காதே,

திமிராய் வா வா!’

என அறம் படத்தின் பாடல் வரிகளுக்கேற்ப மணப்பாறை வட்ட மக்களே முழுமையாய் அறியாத ஊராய் நடுகாட்டுப்பட்டி. ஒத்தயடி பாதையும், சில நேரம் மட்டும் வரும் பேருந்தும், கையால் தகரத்தில் எழுதிய நடுகாட்டு பட்டி பேருந்து நிறுத்தம் என்பதே அந்த ஊரின் அடையாளம். அந்த ஊரை உலுக்கிய சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே ஐந்து முதல் ஆறு வீடுகளே. வானம் பார்த்த பூமியின் ஓரத்தில் அமைந்துள்ளன. வறட்சியை தாங்கி வளரும் சோளம் விதைக்கப்பட்டிருந்தது.

அதில் ஆள்துளை கிணறு வெட்டி நீரின்றி அதன் மீது மண் கொட்டி தகரத்தால் மூடப்பட்டிருந்ததும், தொடர் மழையால் பள்ளம் ஏற்பட்டு, அண்ணனோடு செல்லும் போது மழலை சுஜித் அதில் விழுந்ததும் அதனை தொடர்ந்து நகரும் நிகழ்வுகளையும் அனைவரும் அறிவோம். ஆழ்துளை கிணறில் விழுந்தவர்களை காத்திட அரசிடம் கயிற்றை தவிர வேறெந்த தொழில்நுட்பமும் இல்லை என்பதே நிதர்சனம்.

தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழு வீரர்கள்வந்தவுடன் புதுப் புது முறைகளை கையாண்டு மீட்பார்கள் என்ற கனவும் பொய்யாய்ப் போனது. தனியார் கண்டுபிடிப்பாளர்கள் சொந்த பணத்தை செலவு செய்து சில எந்திரங்களையும் புதிய தொழில் நுட்பங்களையும் செயலாக்கம் செய்திட அனுமதியளிக்க அரசிடம் ஏற்பாடு இல்லை.இன்றைக்கு கூட நாங்கள் பார்த்தோம், எளியமனிதர்கள் ஏராளமான மீட்பு தளவாடங்களோடு எங்களுக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் நாங்க மீட்கிறோம் என, பாதுகாப்புக்கு நிற்கும் காவல்துறையிடம் மன்றாடுகிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்பால் எவ்வாறு மீட்க முடியுமென செயலாக்கி சாலையிலே நின்று காட்டுகிறார்கள். அதை கண்ணெடுத்தும் கண்டிட ஆட்சியாளர்களுக்கு மனமில்லை.  எங்களை கயிறு கட்டி இறங்குகள் நாங்கள் மழலை சுஜித்தை மீட்கிறோம் என்ற சில இளைஞர்களின் குரல்கள் ஒருபுறம்; 

மணப்பாறையில் பிரசித்தி பெற்ற விழா என்றால் வீரப்பூர் திருவிழாவே. அதனை மிஞ்சும் மக்கள் கூட்டம் சாரை சாரையாய் குழந்தைகளும் குடும்பமுமாய் கண்களில் ஈரம் கசிய.. கசிய... அம்மா.. சுஜித் எப்ப மா வருவான்... இன்னக்கி ராத்திரி வந்திருவாப்பா.. இப்படித் தான் மூணு நாள் சொல்றியே மா.. அதுனால தானே நேர்ல பாக்க வந்தோம்... இருமா சுஜித் வெளிய வந்தவுடன் பார்த்த பிறகு வீட்டுக்கு போலாம் மா... என பிஞ்சுகளின் அழுகை ஒரு புறம். தமிழகத்தின் பல்வேறு முனைகளி
லிருந்து இளைஞர்களின் வருகை ஒரு புறம் சுஜித் படங்களோடு மீண்டு வா... மீண்டு வா... சுஜித்தே மீண்டு வா என கோசங்கள் மறுபுறம்.

பல நூற்றுக்கணக்கான வீரர்கள், காவல்துறையினர், அரசு அதிகாரிகள், தனியார் கட்டுமான பிரிவு ஊழியர்கள், வாகன ஓட்டுனர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என இரவு பகல், மழை வெயில் பாராது உழைத்து கொண்டுதான் இருந்தனர்.உடையாத மண் + பாறையான மணப்பாறையை யாருக்காக உடைக்கிறார்கள் என்று தான்தெரியவில்லை. சாதாரண போர்வெல் எல்லாம்ஒரே நாளில் 600 அடி வரை அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் இங்கே, 8 கோடி மதிப்புள்ள ரிக் எந்திரம், சுரங்கம் வெட்ட பயன்படும் கருவிஎல்லாம் வந்தும், பாறையை வெட்ட முடிய வில்லை. 

உலகில் எந்த நாட்டிடமும் நட்டு, போல்டு கூட இரவல் வாங்காமல் பல்லாயிரம் கோடி மைல் கடந்து சந்திரயானை நிலாவிற்கு அனுப்பி இங்கிருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயலாக்கும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவிடம் ஆழ்துளைக் கிணற்றில் 100 அடிக்குள் விழுந்த மழலையை மீட்கும் தொழில்நுட்பம் இல்லை. பாதாள கழிவுநீர் மலத் தொட்டியை சுத்தம் செய்திட தொழில் நுட்பம் இல்லை. விஞ்ஞானமும் ஆராய்ச்சிகளும் நம்போன்ற அடித்தட்டு மக்களுக்கில்லையா?

===பா.லெனின்===
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  திருச்சி மாவட்ட செயலாளர்.