tamilnadu

img

குழந்தை நாடகங்களுக்கு சிவப்புக் கம்பளம்

பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகம் என முத்தமிழுக்கும் சங்கமமைத்து, கலை இலக்கியங்களைக் கொண்டாடிய பெருமையுடையது தமிழ்ச் சமூகம். அதிலும், மனித வாழ்விற்கு அடிப்படையான அறம் சார்ந்த செய்திகளை அனைத்துத்தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்கும் கலை ஆயுதமாக இருந்தவை நாடகங்களே. இயல், இசை இரண்டினையும் தன்னகத்தே உள்ளடக்கிய பெருமை மூன்றாம் தமிழான நாடகத்தமிழுக்கு உண்டு. நாடு அதன் அகத்தில் இருப்பதாலேயே அது நாடகம் (நாடு+அகம்) எனும் சொல்லால் அழைக்கப்பட்டது. கதை, உரையாடல், நடிப்பு, ஆடல், பாடல் என அனைத்தும் சேர்ந்த கூட்டுக்கலவையாக இருந்ததால் மக்களை எளிதில் கவரும் சக்தி வாய்ந்த கலை வடிவமாக நாடகம் திகழ்ந்தது.நீண்டநெடிய வரலாற்றுப் பின்புலத்தை யுடைய தமிழ் இலக்கியப் பரப்பில் குழந்தை இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்குண்டு. குழந்தைப் பாடல்கள். குழந்தை களுக்கான கதைகள் என சிறந்த பங்களிப்புகளை வழங்கியிருக்கும் தமிழ் மொழி, குழந்தைகளுக்கான நாடகங்களையும் வழங்கியிருக்கிறது.

முத்தமிழையும் உள்ளடக்கிய நாடகத் தமிழ்
 சங்க இலக்கியங்களில் குழந்தைகளுக்கான பாடல்கள் ‘பிசி’ எனும் விடுகதைப் பாடல்களாகவும், குழந்தைகளுக்கான கதைகள், பொருள் மரபில்லாப் பொய்ம் மொழி எனும் பெயரிலும் எழுதப்பட்டன. பாடலை இசைத் தமிழ் என்றும், கதையை இயற்றமிழ் என்றும் கொள்ளலாம். முத்தமிழில் இசைத் தமிழும் இயற்றமிழும்  சங்ககாலக் குழந்தை இலக்கியத்தில் இருந்தன. முத்தமிழில் நாடகத் தமிழ் மட்டும் இல்லை.சங்க காலத்திற்கு பின்ன ருங்கூட குழந்தை களுக்கான நாடகங்கள் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஒளவையார், அதிவீரராம பாண்டியர் காலத்திலும் குழந்தைகளுக்கென்று நாடகங்கள் நடைபெற்றதாக குறிப்புகள் ஏதும் கிட்டவில்லை.நம் நாடு ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடியில் சிக்குண்ட பின்னர், மேனாட்டு இலக்கியக் கூறுகளையும் தமிழ் உள்வாங்கிக் கொண்டது. குழந்தை இலக்கியத்துறைக்கென தனிச் சிறப்பிடம் கிடைத்ததும், குழந் தைகளுக்கான நாடகங்கள் எழுதப்பட்டு, அவை மேடையேறியதும் இக்காலத்தில் நடைபெற்றன.

பள்ளிகள் தந்த மேடை நாடகங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழந்தை நாடகங்கள் எழுதப்படலாயின. அப்போது வெளியான இதழ்கள் குழந்தை நாடகங்களைப் பற்றி அக்கறை காட்டவில்லை. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்தியர்களின் விடுதலைப் போராட்டக் குரல்கள் ஓங்கி ஒலித்த காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தைகளை நடிகர்களாகக் கொண்ட நாடகக் குழுக்கள் செயல்பட்டு வந்தன. அவற்றில் பெரியவர்களுக்கான நாடகங்களில் குழந்தைகள் பெரியவர்களாக வேடமேற்று நடித்தனரேயொழிய அவை குழந்தைகளுக்கான நாடகங்களாக இல்லை என்பதையும் அறிய முடிகிறது. பள்ளிக்கூடங்களே குழந்தை நாடகங்களைப் பெரிதும் ஆதரித்ததோடு, அவற்றிற்கு மேடையமைத்தும் தந்தன. பெரும்பாலும் ஆசிரியர்கள் எழுதிய குழந்தைகளுக்கான நாடகங்களே பள்ளிக்கூட விழாக்களில் குழந்தைகளால் நாடகங்களாக நடிக்கப் பெற்றன. துருவன், பிரகலாதன், கண்ணன் ஆகிய குழந்தைகளைப் பற்றிய புராண நாடகங்களே குழந்தைகளுக்கென்றும் நடத்தப்பட்டன. பாடப்புத்தகங்களில் குழந்தைகளுக்கான நாடகங்கள் சில இடம்பெற்றன. 1940-க்கு முன்னர் குழந்தை நாடக நூல் ஏதும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.

சென்னை வானொலியின் நாடகப் பங்களிப்பு
குழந்தைகளுக்கான இதழ்கள் பல வெளிவந்த போதிலும் அந்த இதழ்கள்கூட குழந்தைகளுக்கான நாடகங்களை வெளியிடுவதில் அக்கறை காட்டவில்லை என்பது வருத்தமானதாகும். சென்னை வானொலி நிலையமே குழந்தை நாடகங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்று ஊக்கமளித்தது. வாரத்திற்கு இரு குழந் தைகளுக்கான நாடகங்கள் என்ற அளவில் சென்னை வானொலி நிலையம் ஆண்டுக்கு சுமார் 100 நாடகங்களை ஒலிபரப்பின. குழந்தைகள் தினமான நவம்பர்-14-ஆம் நாளில் குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளை சென்னை வானொலி நடத்தியது. ‘வானொலி அண்ணா’ என்றறியப்பட்ட ர.அய்யாசாமி, சென்னை வானொலி நிலைய குழந்தைகள் பகுதி நிகழ்ச்சிப் பொறுப்பாளராக இருந்தபோது, குழந்தைகளுக்கான தொடர் நாடகங்களை வானொலியில் ஒலிபரப்பினார். பெரியவர்களுக்கான நாடக விழாவினைப் போன்றே குழந்தைகளுக்கான நாடக விழாவினையும் நடத்தினார். சென்னை மட்டுமல்லாது திருச்சி, கோவை, மதுரை, புதுவை வானொலி நிலையங்களும் குழந்தைகளுக்கான நாடகங்களை ஒலிபரப்பின.

குழந்தைகள் நாடகமும் குழந்தை எழுத்தாளர் சங்கமும்…
1950-இல் தொடங்கப்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கம் குழந்தைகள் நாடகத்திற்குச் சிறப்பானதொரு பங்களிப்பினை ஆற்றியது. 1955-இல் ஒரு மணி நேர குழந்தைகள் நாடகப் போட்டியை நடத்தியது. இதே ஆண்டில் குழந்தைகள் நாடக விழாவையும் நடத்தியது.கூத்தபிரான். தம்பி சீனிவாசன், அழ.வள்ளியப்பா, திருச்சி பாரதன், சாந்தலட்சுமி, கி.மா.பக்தவத்சலன், தணிகை உலகநாதன், பூவண்ணன், செளந்தர், ஆலந்தூர் கோ.மோகனரங்கன், கி.பானுமதி, பூதலூர் முத்து, மாமூலன், வைத்தண்ணா, பாணன், ஆர்.விரலட்சுமி, நெ.சி.தெய்வசிகாமணி, ரேவதி, ந.வே.இளங்கோ, மு.சிவம் ஆகியோர் தொடக்கக் காலத்தில் குழந்தைகளுக்கான நாடகங்களை எழுதியதில் குறிப்பிடத்தக்கவர்கள். தம்பி சீனிவாசனின் ‘தங்கக் குழந்தைகள்’ நாடகம் நூலாக வெளிவந்து இந்திய அரசின் பரிசினையும் பெற்றது. கி.மா.பக்தவத்சலன் எழுதிய அசோகன், ராணி மங்கம்மா, ராணி பத்மினி ஆகிய நாடகங்களும் நூலாக வெளிவந்து பாராட்டைப் பெற்றன. தணிகை உலகநாதனின் எலி வேட்டை, வளநாடும் இளங்கன்றும் ஆகிய குழந்தை நாடக நூல்களும் குறிப்பிடத் தக்கவை. சின்னக் குருவி, நாலும் நாலு விதம், சிக்குடு கிச்சுடு ஆகிய நாடக நூல்களை எழுதிய கூத்தபிரான், இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தை நாடகங்களை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான நாடகங்களை அதிக அளவில் எழுதியதில் குறிப்பிடத்தக்கவர் பூவண்ணன். குழந்தைகளுக்கான முழுநீள நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரது நாடகங்கள் பல நூல்களாக வெளிவந்துள்ளன. ‘எழுத்து மாறாட்டம்’ எனும் நகைச்சுவை நாடகம் நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் அரங்கேறிய பெருமைக்குரியது.

நாடக சாலை நற்கலாசாலை
‘கண்ணைச் செவியைக் கருத்தைக் கவர்ந்து நமக்குஎண்ணரிய போதனைகள் ஈவதற்கு – நண்ணுமிந்தநாடகசாலையொத்த நற்கலாசாலை யொன்றுநீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – என்றெழுதினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் நாடகக் கலை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் விளைந்த திரைப்படக் கலையினால் பெரிய அளவில் நலிவுற்றது. தமிழகமெங்கும் பல்வேறு நாடகக் குழுக்கள் இயங்கிவந்த நிலை மாறி, இன்றைக்கு குறிப்பிடத்தக்க சில குழுக்களே நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. நாடகக் கலையின் நிலையே இவ்வாறிருக்கையில், குழந்தைகளுக்கான நாடகங்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா..? தமிழில் இன்றைக்கு மிக குறைந்த அளவிலான எழுத்தாளர்களாலேயே குழந்தை நாடகங்கள் எழுதப்படுகின்றன. வெகுசன இதழ்கள், குழந்தைகளுக்கான இதழ்கள் என எதிலும் குழந்தைகளுக்கான நாடகங்கள் வெளிவருவதில்லை. நாடகம் என்றாலே தொலைக்காட்சி நாடகங்கள் என்பதாக நாடகக் கலை இன்றைக்கு பலராலும் சுருங்கிய அளவில் அறியப்படுகிறது. நாளிதழ்களோடு இணைப்பாக வெளிவரும் குழந்தைகளுக்கான இணைப்பிதழ்களில் அரிதாக நாடகங்கள் சில வாசிக்கக் கிடைக்கின்றன. 

காட்சிகளின் ஈர்ப்பு சக்தி
நாடகக் கலை காட்சிப்பூர்வமானது என்பதால் அதன் தாக்கமும் அதிகம். பார்வையாளர்களைச் சட்டென தன்பால் ஈர்க்கும் சக்தி படைத்தவை நாடகங்கள். குழந்தைகளுக்கான அறநெறிச் சிந்தனைகளை நாடகங்கள் வழியாகச் சொல்லும்போது, அவர்களின் மனதில் அழுத்தமாகப் பதிவதோடு நல்ல தாக்கத்தையும் அவை உண்டாக்கும். சிறுவனாக இருந்தபோது காந்தியடிகள் கண்டு ரசித்த ‘அரிச்சந்திரன்’ நாடகமே, அவரை எந்நிலையிலும் பொய் பேசாத மகாத்மாவாக மாற்றியமைத்தது என்பதை அனைவரும் அறிவோம்.அத்தகைய வீரிய ஆற்றலையுடைய நாடகக் கலை, இன்றைக்கு குழந்தைகளுக்கு எட்டாக்கனியாக இருப்பது நமக்கு சம்மதம்தானா..!பள்ளிக்கூட விழாக்களிலும் இப்போதேல்லாம் குழந்தைகளுக்கான நாடகங்கள் அரங்கேறுவது அருகிவிட்டன. குழந்தைகளுக்கான நாடகங்களின் எதிர்காலம் என்னாவாகுமோ என்கிற கவலை நம் மனதில் இயல்பாக எழுகிறது.இந்நிலை ஒருபுறமிருக்க இன்றைக்கும் குழந்தைகளுக்கான நாடகங்களை எழுதும் எழுத்தாளர்கள், தங்கள் மன விருப்பத்திற்காக எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவை நூல்களாகவும் வெளிவருகின்றன. அவைகள் நாடகங்களாக நடிக்கப்பெற்று குழந்தைகளின் கவனத்திற்கு சென்றால் மட்டுமே மிகுந்த பயனளிக்கும்.

மா.கமலவேலன். காந்தலெட்சுமி சந்திரமெளலி, குலசேகரன், என்.சி.ஞானப்பிரகாசம், வேணு சீனிவாசன், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம், கொ.மா.கோதண்டம், குழ.கதிரேசன், வேலுசரவணன், பூதலூர் முத்து, ஜெயந்தி நடராசன், எ.சோதி, சென்னிமலை தண்டபாணி, தேவி நாச்சியப்பன், புலேந்திரன், ஆர்.வி.பதி, இரா.காளீஸ்வரன், மா.தமிழரசி, மு.கலைவாணன், கிருங்கை சேதுபதி, மு.முருகேஷ் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கான நாடகங்களை எழுதி வருகின்றனர். அவற்றில் சில நூல்களாகவும் வெளிவந்துள்ளன.     இன்றைய வேகமான அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கான நாடகங்களைப் படைப்பதோடு அவற்றை பள்ளிகளின் விழாக்களில் அரங்கேற்றி குழந்தைகள் மிகுதியாகப் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சிறு நாடகங்களைக் குழந்தைகளை வைத்தே நடிக்க வைத்து அவற்றை செல்பேசி முகநூல் புலனம் ( றூ யவளயுயீயீ) வலையொளி (லுழரவரடிந) ஆகியவற்றின் மூலமாக குழந்தைகளின் கவனத்திற்குச் சென்றடைய வேண்டும். இவற்றோடு மாநில அரசின் முன்முயற்சியில் குழந்தைகளுக்கான நாடக விழாக்கள் நாடகப் போட்டிகளும் நடைபெற வேண்டும்.குழந்தைகளுக்கான நாடகங்களை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலமாக இன்றைய தமிழ்ச் சூழலில் குழந்தைகளுக்குள் தவறான சிந்தனைப் போக்குகளைப் பரப்புகிற ஒழுக்கமற்ற செயல்பாடுகளிலிருந்து குழந்தைகளை மீட்டெடுப்பதற்கான நல்வாய்ப்பாகவும் இது அமையும்.    நாடகங்கள் படைப்போம்! நல்சிந்தனைகளை விதைப்போம்!!

காந்தி கிராம நிகர்நிலை பல்கலைகழகத்தில் நடைபெற்ற 2வது உலக குழந்தை இலக்கிய மாநாட்டில் கவிஞர் மு.முருகேஷ் சமர்ப்பித்த கட்டுரை
- தொகுப்பு : இலமு