உதகை:
தோட்டத் தொழிலாளர்கள் முத்தரப்பு ஆலோசனைக் கூட்டம் உதகையில் நடைபெற்றது.உதகையில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் 50 ஆவது தோட்டத் தொழிலாளர்கள் ஆலோசனைக்குழு கூட்டம் தமிழக அரசின் தொழிலாளர் நல ஆணையர் ஆர்.நந்தகோபால் தலைமையில் வெள்ளியன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் டேன்டீ நிறுவனத்தை புனரமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்கவேண்டும். தோட்டத் தொழிலாளர் நல சட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.முன்னதாக, இந்த கூட்டத்தில்தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் , ஆனைமலை தோட்ட முதலாளிகள் சங்கம், பிளாண்டேஷன் அசோசியேசன் சங்கம் உள்ளிட்ட தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தினர், சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் கே.சி. கோபிக்குமார், ஏஐடியுசி தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பாலகிருஷ்ணன், எஸ்எம்எஸ் சங்கத்தின் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.