திருச்சி,அக்.29- மணப்பாறை அருகே நடுக்காட்டுப் பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து, கடுமையான மீட்புப் பணி பலனளிக்காத சூழலில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25 அன்று மாலை 5.40 மணியளவில் அப்பகுதியைச் சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித், பயன்படுத்தப் படாமல் கிடந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் நான்கு நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் திங்களன்று இரவு 10.30 மணி யளவிலிருந்து துர்நாற்றம் வருவ தாகவும் ஆழ்துளை கிணற்றில் சிக்கி யிருந்த குழந்தை உயிரிழந்ததாகவும் செவ்வாயன்று அதிகாலை 2.30 மணி யளவில் வருவாய் நிர்வாக ஆணை யர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதன்பின்னர் ஆழ்துளை கிணற்றில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரி சோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்து சுஜித் உடல் பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டது. மருத்துவமனையில் சுஜித்தின் உடலுக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து செவ்வாயன்று காலை சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து, கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிநிகழ்ச்சி நடைபெற்றது. பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் சுஜித் உடலுக்கு திருச்சி ஆட்சியர் சிவராசு, எம்.பி.ஜோதிமணி மற்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு கான்கிரீட் கலவை கொண்டு மூடப்பட்டது. மீட்புப் பணிக்காக அருகில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறும் மூடப்பட்டது.