மதுரை
தமிழகத்தின் 2-வது பெரிய நகரான மதுரையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் தினமும் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், இதுவரை 77 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா பரவல் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மதுரை மாநகராட்சி பகுதி, மார்க்கெட் பகுதியான பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஒன்றியம் ஆகிய பகுதிகளுக்கு 2-ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வரும் 12-ஆம் தேதி நிறைவடையும் நிலையில், மதுரையில் முகக்கவசம் கட்டாயம் என்பதை விழிப்புணர்வு செய்ய தனியார் உணவகம் ஒன்று முக கவச வடிவிலான பரோட்டாக்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த விழிப்புணர்வு பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ள நிலையில், நெட்டிசன்கள் மீம்ஸ் செய்து அந்த உணவகத்தை பாராட்டி வருகின்றனர்.