tamilnadu

img

சித்ரவதை செய்து கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ்

சாத்தான்குளம் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக: சிபிஎம்

சென்னை,ஜூன் 23- தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால் சட்ட விரோதமாக துன்புறுத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறையினரால் ஜெயராஜ் (வயது 60), பென்னிக்ஸ் (வயது 31) ஆகியோர் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை கடும் அதிர்ச்சி யை ஏற்படுத்துகிறது.  ஜெயராஜ் நடத்துகிற  செல்போன் கடையை  சாத்தான்குளம் காவல்நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் மூடச்சொன்ன பிரச்சனையை ஒட்டி, அவரைக் காவல்நிலையத்திற்கு அழைத்துக் கொண்டு போய்  அங்கே வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளார்கள். இவ்வாறு காவல்நிலை யத்திற்கு கொண்டு போகும் முன்பு உச்சநீதிமன்றம் டி.கே.பாசு வழக்கில் சொல்லி யுள்ள படியோ அல்லது நடைமுறை சட்டங்களின்படியோ என்ன வழக்கிற்காக ஜெயராஜை காவல்நிலையத்திற்கு அழைத்து செல்கின்றோம் என்கிற விபரத்தினை ஜெயராஜிடம் சொல்லவில்லை. அதே போல் எந்த குற்ற எண்ணில் வழக்கு பதிவு செய்யபட்டிருந்தது, அந்த வழக்கு  விசாரணைக்காக ஜெயராஜை காவல்நிலையத்திற்கு யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது குறித்த எழுத்துப்பூர்வமான குறிப்பு எதனையும் ஜெயராஜின் மனைவியான செல்வராணியிடம் வழங்கிடவில்லை. எனவே ஜெயராஜை காவல்நிலையத்திற்கு மேற்படி போலீசார் சட்டவிரோதமாக அழைத்து சென்றுள்ளார்கள்.

இந்த விபரம் தெரிய வந்தவுடன் ஜெயராஜின் மகனான பென்னிக்ஸ்சும் சாத்தான் குளம் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவரது தந்தையை உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் சில போலீசார் அடித்து சித்ரவதை செய்வதை பார்த்து போலீசாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் மேற்படி போலீசார் பென்னிக்ஸ்சையும் அடித்து சித்ரவதை செய்துள்ளார்கள். பென்னிக்ஸின் ஆசன வாயில் லத்தி கம்பை நுழைத்து சித்ரவதை செய்தது உள்ளிட்டு பல வழிகளிலும் துன்புறுத்தியுள்ளார்கள். இதன் பிறகு சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் வழக்கம் போல் ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளார்கள். இந்த பொய் வழக்கில் மேற்படி இரண்டு பேர்களையும் கைது செய்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்துள்ளார்கள்.

மேற்படி இரண்டு பேர்கள் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இணையத் தளத்தில் பார்வையிடலாம் என்று முயற்சி செய்த போது இணையத்தளத்தில் அந்த முதல் தகவல் அறிக்கை முடக்கி வைக்கப்பட்டதாக காணப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் நீதிமன்றத்திலிருந்து சுமார் 25 கி.மீ  தூரத்தில் ஸ்ரீவைகுண்டம் சப்ஜெயில் உள்ளது. அதே  தொலைவில் திருச்செந்தூ ரிலும் சப்ஜெயில் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பேரூரணியில் மாவட்ட சிறை சாலையும் உள்ளது. குறைந்தபட்சம் அரைமணி நேரத்திலிருந்து அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் மேற்படி 3 சிறைச்சாலைகளில் ஏதாவது ஒன்றில் ஜெயராஜை யும், பென்னிக்ஸ்சையும்  வைத்திட வாய்ப்பு இருக்கும் பொழுது சாத்தான்குளம் நீதி மன்றத்திலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளை சிறையில் மேற்படி இருவரையும் அடைத்துள்ளார்கள். எனவே சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் அவர்கள் செய்த சட்டவிரோத காரியங்களை மறைப்பதற்காக கோவில்பட்டி ஜெயிலில் இரண்டு பேரையும் வைத்திட ஏற்பாடு செய்துள்ளார்கள்.

கோவில்பட்டி ஜெயிலில் மேற்படி இரண்டு பேர்களையும் அனுமதிக்கும் முன்பு காயங்கள் இருந்துள்ளது கட்டாயமாக தெரிய வந்திருக்க கூடும். இருந்தபோதிலும் மருத்துவமனையில் அனுமதிக்ககோரிடாமல் ஏன் ஜெயிலுக்குள் அனுமதித்தார்கள் என்பதும் விரிவாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அம்சம்.  சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளார்கள் என்று தெரிந்தே கோவில்பட்டி சப்ஜெயில் அதிகாரிகள் தவறுக்கு துணைபோயிருக்கிறார்கள்.

மேற்கூறிய சூழலில்;

* சாத்தான்குளம் காவல் நிலைய  ஆய்வாளர்  உதவி ஆய்வாளர்கள் (ஸ்ரீதர், ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட) சம்பந்தப்பட்ட காவலர்கள்  மீது கொலை வழக்கு உள்ளிட்ட உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.

* மனித உரிமை மீறல், காவல்நிலைய துன்புறுத்தல் காரணமாக கணவரையும்,  மகனையும் இழந்து வாடும் செல்வராணிக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட வேண்டும்.

* ஜெயராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும்.

* கொரானா நோய் தொற்று காலத்தில் சாத்தான்குளம் மேஜிஸ்ட்ரேட் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோரை ஜெயிலில் வைத்திட ஏன் உத்தரவிட்டார் என்பது சம்பந்தமாகவும், மேற்படி இரண்டு பேர்களுக்கும் இருந்த காயங்களை பதிவு செய்யாதது தொடர்பாகவும் முழுமையாக விசாரணை செய்திட வேண்டும்.

* அருகாமையிலுள்ள ஜெயிலில் வைத்திடாமல் அதிக தொலைவில் உள்ள கோவில்பட்டி ஜெயிலில் மேற்படி இரண்டு பேர்களையும் அனுமதித்துள்ளது குறித்து சம்பந்தப்பட சிறை துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

* கோவில்பட்டி  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எண்.1 அவர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ், ஆகியோர் இறந்து போனது தொடர்பாக நடத்தி வருகின்ற விசாரணையில் அனைத்து ஆவணங்களையும், காவல்நிலைய, சப்ஜெயில் சிசிடிவி பதிவுகளையும் உடனடியாக கைப்பற்ற வேண்டும்.

* காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் மரணம் என அங்கீகரித்து அதற்குரிய மேல் நடவடிக்கைகளை விரைவாக எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசையும், மாநில காவல்துறையையும்  வலியுறுத்துகிறோம்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு சிபிஎம் சாலை மறியல் போராட்டம்.