சென்னை:
சாத்தான்குளம் வணிகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரண வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வரும் நிலையில், வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்க ஒப்புக் கொண்டு மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி சாத்தான் குளத்தில் பென்னிக்ஸூம் அவரது தந்தை ஜெயராஜூம் செல் போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் வந்த விவகாரத்தில் போலீஸாரால் கைது செய்யப் பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்.பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் அனுமதிக்கப்பட்டதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. சம்பந்தப் பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்தது.
மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சேலத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அறிவித்தார். உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பில் அதுகுறித்து அறிவித்தது.கடந்த ஜூன் 29-ம் தேதி அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றும் அரசாணையை அரசு வெளியிட்டது. பின்னர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சிபிசிஐடி இடையில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. மளமளவென காரியத்தில் இறங்கிய சிபிசிஐடி போலீஸார், சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் 302-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சாட்சியங்களை வலுவாகத் தயார் செய்தனர். அவர்கள் செயலை நீதிமன்றமே பாராட்டியது. இந்நிலையில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கோரும் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்ட நிலையில் மத்திய அரசு அதற்கான ஒப்புதல் அறிவிக்கையை வெளியிட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பு:
“தூத்துக்குடி மாவட்டம், சாத் தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மூலம் விசாரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந் தார். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.தூத்துக்குடி மாவட்டம், சாத் தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணம் குறித்து மத்திய புலனாய் வுத் துறை (சிபிஐ) விசாரிக்க முதல் வர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு தற்போது அறிவிக்கையை வெளியிட்டுள்ளது”.இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.