சென்னை, அக்.23- குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைவதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியதால் தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெயில் அடித்தது. மழையின் தாக்கம் ஓரளவு குறைந்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு திசையை நோக்கி நகர்ந்து ஆந்திர கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதைபோல் அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.