சென்னை,நவ.17- கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில், மிதமான மழை அல்லது கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸூம் குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸூம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பி.டி.ஓ.வில் 17 சென்டிமீட்டரும், குன்னூர் டவுனில் 14 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.