tamilnadu

img

சென்னையில் நாளை குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

பினராயி விஜயன், நாராயணசாமி, மு.க.ஸ்டாலின் பேசுகின்றனர்

சென்னை, பிப். 24 - தமிழக மக்கள் ஒற்றமை மேடை சார்பில் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ பிப்.26 அன்று சென்னையில் நடைபெறுகிறது. இது தொடர்பாக திங்களன்று (பிப்.24) சென்னையில் செய்தியாளர்களிடம்  அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ), 10க்கும் மேற்பட்ட மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, இந்த சட்டங்களை ஆதரித்த கட்சிகள், பாஜக-வின் கூட்டணி கட்சிகளே கூட அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ளன. இதனை தமிழக அரசு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். கேரளா, புதுச்சேரி வழியைப் பின்பற்றி தமிழகம் அரசும் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், புதிதாக சேர்க்கப்பட்ட கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். அப்படியென்றால், அந்த 6 கேள்விகளை நீக்கினால்தான் என்பிஆர் அமல்படுத்தப்படும் என்று சொல்ல தயங்குவது ஏன்? 98 விழுக்காடு மக்களிடம் ஆதார் இருக்கும் போது என்பிஆர் எதற்கு?

எனவே, மத்திய, மாநில அரசுகள் பிடிவாதமாக உள்ள நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறோம். அதன் ஒருபகுதியாக பிப்ரவரி 26 அன்று மாலை சென்னை, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் ‘குடியுரிமை பாதுகாப்பு மாநாடு’ நடைபெற உள்ளது. இதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், புதுச்சேரி முதலமைச்சர் வே.நாராயணசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர் என்.ராம், சமயத் தலைவர்கள் பாலபிரஜாபதி அடிகளார், மௌரலான ஹாஜாமொய்தீன் பாகவி, பேராயர் தேவசகாயம் உள்ளிட்டோர் உரையாற்றுகிறார்கள். மேடை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் வரவேற்கிறார். கேரள முதல்வர் உரையை சிறுபான்மை மக்கள் நலக்குழு  அமைப்பாளர் எஸ்.நூர்முகமது தமிழாக்கம் செய்கிறார். பாடகர்கள் அறிவு,  நாகூர் ஹனிபா நௌஷாத் இசை முழக்கத்தோடு மாநாடு நடைபெற உள்ளது.

மாநாட்டில் தீர்மானங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி. சம்பத், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கிறிஸ்துவ மக்கள் முன்னணி தலைவர் இனிகோ இருதயராஜ், கல்வியாளர் தாவூத் மியாகான், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர், இமாம் மன்சூர் காசிபி, மஸ்ஜித் கூட்டமைப்பின் பஷீர் முகமது, வெல்ஃபேர் கட்சியின் எஸ்.என். சிக்கந்தர் ஆகியோர் முன்மொழிந்து வழிமொழிகிறார்கள். சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர் எம். ராமகிருஷ்ணன் நன்றி கூறுகிறார். இவ்வாறு அவர் கூறினார். இச்செய்தியாளர் சந்திப்பில் எம்.எச். ஜவாஹிருல்லா, கோபண்ணா, தாவூத் மியாகான், க.உதயகுமார், அ. குமரேசன், எம். ராமகிருஷ்ணன், எஸ். குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.