சென்னை,அக்.22- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வரதப்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகேயுள்ள நத்தம் என்ற ஊரைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். கல்கி ஆசிரமம் நிலங்களை வாங்கி குவித்துள்ளது தொடர்பாக வருமான வரித்துறையினருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 16 ஆம் தேதியன்று முதல் 5 நாட்கள் கல்கி ஆசிரமத்திலும், அதன் கிளைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் ரூ.800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்து இருப்பதால் அதுபற்றி விஜயகுமாரின் குடும்பத்தினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் முறையான பதில் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தலைமறைவாகயிருந்த சாமியார் கல்கி,மனைவியுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சாமியார் கல்கி விஜயகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. நேமத்தில்தான் தங்கியிருக்கிறோம். ஆசிரமத்தில் எல்லா நடவடிக்கைகளும் இயல்பான வகையில் நடந்து கொண்டிருக்கின்றன.எங்களுக்கு எந்த உடல் நலப் பாதிப்பும் இல்லை. நாங்கள் நலமாகவே இருக்கிறோம். நாங்கள் எங்கும் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என்று கூறியுள்ளார்.