கோயம்புத்தூர்:
கல்விக்கடன் பெற்றவர்களை உடனடியாக செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகங்கள், தனியார் வசூல் ஏஜென்சிகள் மூலம் நிர்பந்தம் செய்வதால் ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்கள் கடும் மனஉளைச்ச லுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து கோவை சாயிபாபா காலனி யை சேர்ந்த தனலட்சுமி என்கிற மாணவி கூறுகையில், நான் தனியார் கல்லூரியில் படிப்ப தற்கு அரசு பொதுத்துறை வங்கியில் ஒன்றரை லட்சம் ரூபாய் கல்விக் கடனாக பெற்றேன். படித்து முடித்து பட்டமும் பெற்றுவிட்டேன். ஆனால் எந்த வேலையும் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி, உங்களுக்கான தவணைகாலம் முடிந்துவிட்டது; வட்டியுடன் சேர்த்து 4 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்கிறார்கள். மேலும் உடனடியாக கட்டுவதாக தெரிவித்தால் இரண்டு லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்கிறோம். இப்போது உடனே ஒரு லட்சம்ரூபாய் கட்டி அதற்கான உத்தரவை பெறுங்கள்என்கின்றனர். என் தந்தை, தாய் இருவரும் கட்டிட வேலைக்கு செல்கின்றனர். நாங்கள் எப்படி உடனடியாக ஒரு லட்சம் ரூபாயை கட்ட முடியும்?” என்கிறார்.
“கட்சிக்காரர் ஒருவர் அழைத்துச் சென்றுதான் இந்த கல்விக்கடனை பெற்றுக் கொடுத்தார். அப்போது அவர்கள் படித்து முடித்துவேலைக்கு போனவுடன் கொடுத்தால் போதும் என்று வங்கி அதிகாரிகள் முன்னிலையிலேயே தான் தெரிவித்தார்கள். இப்போது இப்படி நெருக்கடி கொடுக்கிறார்கள். நாள்தோறும் தொலைபேசியில் அழைத்து கடனை கட்டச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆகவேஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்” என்றும் வேதனையோடு கூறினார் தனலட்சுமி.
பாலாஜி என்கிற மாணவர் கூறுகையில், “நான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு கல்விக் கடன் வாங்கினேன். உருப்படியான எந்த வேலையும்கிடைக்காத நிலையில் கடனை கட்ட முடியவில்லை. இப்போது தனியார் வங்கியில் வேலைக்கான உத்தரவு கிடைத்தது. இதனையடுத்து நேர்காணலுக்கு சென்றேன். அங்கு நீங்கள் வங்கியில் கல்விக்கடன் பெற்றுள்ளீர்கள். அதனை கட்டினால்தான் வேலை தரமுடியும் என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். அரசு மற்றும் தனியார் வங்கிகள் அனைத்தும் ‘சிண்டிகேட்’ அமைத்து வசூலிக்கிற ஏற்பாடு நடைபெறுகிறது. நாங்கள் அரசு வங்கியில் கடன் பெற்றோம். இப்போது சம்பந்தமே இல்லாத நபர்கள் வீட்டிற்கு வந்தும், தொலைபேசியில் அழைத்தும் பணத்தை கட்ட சொல்லி இழிவான வார்த்தைகளை பேசுகிறார்கள்.”
ரிலையன்ஸ் நிறுவனம்
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஆர்.மகேஸ்வரன் கூறுகையில், பொதுத்துறை வங்கிகளில் கல்விக்கடனாக பெற்றவர்கள் மொத்தமே இரண்டுசதவிகிதத்திற்கும் கீழ் தான் உள்ளனர். விவசாயிகளின் கடன் சுமார் 8 சதவிகிதம் அளவிலேதான் உள்ளது. மற்ற 90 சதவிகித கடன்கள் பெரும் நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் பெற்ற கடன்கள்தான். ஆனால் வங்கி நிர்வாகங்கள் பெரும் தொகையை பெற்றவர்களிடம் வசூலிக்க கெடுபிடி காட்டாமல் சாதாரண மக்களிடம் காட்டுகிறார்கள். குறிப்பாக ஸ்டேட் வங்கியில் மாணவர்கள் கல்விக் கடனாக பெற்றதுசுமார் 800 கோடியில் இருந்து 1300 கோடிரூபாய்வரைதான். இந்த கடன் பெற்றவர் களின் முழுவிபரங்களையும் ரிலையன்ஸ் நிறுவனஏஜென்சிக்கு கொடுத்துவிட்டு ரூ.360 கோடியை ஸ்டேட் வங்கி பெற்றுக்கொண்டுள்ளது. இப்போது ஸ்டேட் வங்கியில் கல்வி கடன் பெற்றவர்களை ரிலையன்ஸ் நிறுவனம் கந்து வட்டிக்காரன் போல நெருக்குகிறது. ரிலையன்சைப் பொருத்தவரையில் 360 கோடி ரூபாய்க்குமேல் வருகிற ஒவ்வொரு ரூபாயும் லாபம்தான் என்கிற கண்ணோட்டத்தோடு வசூல் செய்வதில் தீவிரம் காட்டுகிறது.
இதேபோல் மற்ற வங்கிகள் ரெக்கவரி ஏஜென்சியிடம் பணம் வசூலிக்க ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இதில் வசூல் செய்கிற பணத்தில் 4 சதவிகிதம் வரை கமிஷன்கிடைக்கும் என்பதால் இவர்கள் முகவர்களை நியமித்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் பணத்தை கட்ட சொல்லி நெருக்கடிகொடுக்கிறார்கள். மக்கள் கந்துவட்டிக்காரனி டம் சிக்கி சீரழிகிறார்களே என்கிற நோக்கத்தில் தான், அரசு பொதுத்துறை வங்கிகளே கடன் கொடுப்பதற்கு முன்வந்தது. இப்போது அந்த பணியை கந்துவட்டிக்காரன் போல வங்கிகளேஆளை நியமித்து கெடுபிடி காட்டுவதுதான் வேதனைக்குள்ளாக்குகிறது. அரசு பொதுத்துறையாக வங்கிகள் இருக்கும்போதே இதுதான் நிலை என்றால் அனைத்து வங்கிகளும்தனியார் மயமாகிப்போனால் கந்து வட்டிக் காரனிடம் கடன் வாங்கியது போலத்தான் இனிவரும் காலம் அமையும் என்கிற ஆபத்து உள்ளது. மேலும், கடன் பெற்றவர்களிடம் கெடுபிடி காட்டக்கூடாது. தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. கடன் பெற்றவர்களின் நிலை உணர்ந்து வசூலில் ஈடுபட வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல் உள்ளது. தனியார் நிறுவனங்கள் கடன்களை வசூல் செய்ய அனுமதித்துவிட்டதால் அந்த வழிகாட்டுதல்கள் எல்லாம் ஏட்டளவில் என்கிறநிலைதான் தற்போது உள்ளது. இதுபோன்ற தொடர் புகார்கள் வருகிற நிலையில் அரசுதான் உரிய வழிகாட்டுதல் மற்றும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அது வரை இந்த நிலை தொடரும். வங்கி அதிகாரிகளுக்கும் வேறு வழியில்லாத நிலைதான் உள்ளது என்றார்.
பி.ஆர்.நடராஜன் எம்.பி. கண்டனம்
இப்பிரச்சனை தொடர்பாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்.பிவிடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கல்விக் கடன் பெற்றவர்களிடம் வங்கி நிர்வாகங்கள் பணத்தை செலுத்த வேண்டும்என தொடர்ந்து நிர்ப்பந்தம் அளிப்பதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வருகிறது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கல்விக்கடனை அடைத்துவிடலாம் என்கிற நம்பிக்கையின் காரணமாகவே மாணவர்கள் கல்விக்கடன் பெறுகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கையின் காரணமாக நிரந்தர வேலையில் இருப்பவர்கள் கூட வேலையில் இருந்துநீக்கப்படுகிறார்கள். அரசுத்துறை காலிப்பணியிடங்களும் நிரப்பப்படுவதில்லை. மாறாகதனியார் துறைக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய அரசுத்துறை, ஒப்பந்த அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. சட்ட - சமூக பாதுகாப்பான வேலை என்பது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ள. வேலையின்மையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வங்கி நிர்வாகங்கள் உடனடியாக பணத்தை கட்ட வேண்டும் என நிர்பந்திப்பதாக புகார்கள் வருகிறது. இதனை ஏற்க முடியாது. ஏற்கனவே நல்ல நிலையில் தொழில் செய்து வந்த தொழில் முனைவோர்களே பொருளாதார நெருக்கடி காரணமாக வங்கியில் பெற்ற கடனை கட்ட கால அவகாசம் கேட்டு விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வங்கி நிர்வாகங்கள் உணர வேண்டும்.
ஒரு சில வங்கிகள் கல்விக் கடன் பெற்ற வர்களிடம் பணம் கட்டவில்லையென்றால் ஜப்தி செய்வோம், எந்த வேலையும் கிடைக்காமல் செய்வோம் போன்ற மிரட்டலில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. பல்லாயிரக்கணக் கான கோடி ரூபாய்களை கடனாக பெற்ற பெரும்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வராக்கடன் என தள்ளுபடி செய்துவிட்டு ஏழை, எளியமாணவர்கள் கல்விக்கடனாக பெற்ற சிறியதொகையை வசூலிக்க உட்சபட்ச அதி காரத்தை பயன்படுத்தி வங்கி நிர்வாகங்கள் மிரட்டுவது ஏற்புடையதல்ல. இதுபோன்ற நடவடிக்கையால் மதுரையில் லெனின் என்கிற மாணவர் சில ஆண்டுகளுக்கு முன்புதற்கொலை செய்து கொண்டதும், இந்த அதிர்ச்சியில் இருந்து தமிழகம் மீளாத நிலையில் மீண்டும் வங்கி நிர்வாகங்கள் கல்விக்கடன் பெற்றவர்களை நெருக்கடியில் தள்ளி மன உளைச்சலை ஏற்படுத்தும் நடவடிக்கையை வங்கி நிர்வாகங்கள் உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
====அ.ர.பாபு====.