tamilnadu

img

புதிய பென்சன் திட்டத்தை கைவிடுக!

வருமானவரி ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஜன. 22 - புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வருமானவரி ஊழியர் சங்கத்தின் 12வது மாநாடு வலியுறுத்தி உள்ளது. வருமான வரி ஊழியர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை 12வது மாநாடு அண்மையில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேஷூவல் ஊழியர்களை பணிவரன்முறைப்படுத்த வேண்டும். அனைத்துப் பிரிவு காலிப்பணியிடங்களையும் நிரப்புவதோடு, பதவி உயர்வுகளையும் தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் தலைவர் பி.மீராபாய் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் எஸ்.கே.மிட்டல், தலைமை வருமானவரி ஆணையர் ராஜீவ் விஜய் நபார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், பி.வேலுசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் எம்.எஸ்.வெங்கடேசன், வரவேற்புக்குழுத் தலைவர் ஆர்.ஆர்.ஷயாம்நாத், முன்னாள் தலைவர் எம்.சந்தானம் உள்ளிட்டோர் பேசினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவர் கே.கே.என்.குட்டி, பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன், வருமான வரி ஊழியர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரவீந்திரன் பி.நாயர், பொதுச்செயலாளர் ரூபக் சர்க்கார், தில்லி மண்டலச் செயலாளர் வினோத், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஏ.செல்வம் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். சங்கத்தின் தலைவராக என்.வைத்தியநாதனும், பொதுச்செயலாளராக எம்.எஸ்.வெங்கடேசனும், பொருளாளராக டி.எஸ்.வீரபத்திரமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.