ஓசூர்:
ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டாவது கட்டமாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த 1498 பேர் ஒடிசா மாநிலத்துக்கு சிறப்பு ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். அப்படி விண்ணப்பித்தவர்களில் முதல் கட்டமாக கடந்த 21-ம் தேதி ஓசூரிலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு சிறப்பு ரயில் மூலமாக 1600 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்.அதைத் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 1456 பேர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருந்து 42 பேர் என மொத்தம் 1498 பேர் சிறப்பு ரயில் மூலமாக ஓசூரிலிருந்து ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. ஒடிசா சென்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்பு ரயிலில் செல்வதற்கான பாஸ் வழங்கப்பட்டது.இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருக்கும் பயணத்தின் போது சாப்பிட சப்பாத்தி, புளிசாதம், பிஸ்கட், மாம்பழம், வாழைப்பழம், குடிநீர் பாட்டில், மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார்.