tamilnadu

img

குஜராத் வன்முறையில் தப்பியவர் அமித்ஷாவை எதிர்த்துப் போட்டி

அகமதாபாத்:

கடந்த 2002-ஆம் ஆண்டு, மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, அங்கு சிறுபான்மையினருக்கு எதிராக பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. இஸ்லாமியர்கள் கூட்டம் கூட்டமாக கொன்று குவிக்கப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில், அகமதாபாத்தில் வசிக்கும் பிரோஜ் கான் பதான் என்பவரின் குடும்பமும் ஒன்றாகும். இந்த ஒரு குடும்பத்தில் மட்டு பிரோஜ் கானின் தாயார், பாட்டி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பிரோஜ் கானும் அவரது சகோதரர் இம்தியாஸ் கானும் மட்டுமே உயிர் தப்பினர். குல்பர்க் சொசைட்டி படுகொலை என்ற அழைக்கப்படும் இச்சம்பவம் தொடர்பான வழக்கு தற்போதும் நிலுவையில் இருக்கிறது. பிரோஜ் கானின் சகோதரர் இம்தியாஸ் கான்தான், இவ்வழக்கின் அரசுத் தரப்புச் சாட்சி ஆவார். இந்நிலையில், பிரோஜ் கான், அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.குஜராத் வன்முறையின்போது, மோடியின் வலதுகரமாக இருந்த அமித்ஷா, இன்று பாஜக தலைவராகி விட்டார். மூத்த தலைவர் அத்வானியிடமிருந்து காந்தி நகரைத் தட்டிப்பறித்து, அந்த தொகுதியின் வேட்பாளராகவும் மாறியிருக்கிறார். இந்த சூழலிலேயே அமித்ஷாவுக்கு எதிராக பிரோஜ் கான் காந்தி நகரில் போட்டியிடுகிறார். குஜராத் படுகொலைகள் விஷயத்தில், மோடி - அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம் இன்னும் தொடர்கிறது என்பதை உலகத்திற்கு காட்டவே, காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவதாகவும், ஏராளமான இந்து நண்பர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாகவும், பிரோஜ் கான் கூறியுள்ளார்.