tamilnadu

img

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டை பிளவுபடுத்துகிறது

அகமதாபாத்
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் இந்தியாவைப் பிளவுபடுத்துவதாகவும், இந்த பிளவுவாத கொள்கையை உணர்ந்து நாட்டு மக்கள் அதனை எதிர்க்க வேண்டும் என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

கஸ்தூரிபாய் காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம், குஜராத் மாநிலம் போர்பந்தரில் நடைபெற்ற நிலையில், அதில், கலந்துகொண்டு காந்தியின் பேரன் துஷார் காந்தி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:“நாட்டைத் துண்டாடும் கொள்கையை, ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கிறது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அவ்வாறு போராடாவிட்டால், நாம் காந்தியின் தொண்டர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அர்த்தம் இல்லை. 

ஜனநாயகத்தைக் காப்பதற்கு காந்தியவாதிகள் முக்கியப் பங்காற்ற வேண்டும். இந்திரா காந்தி சர்வாதிகாரமாக நடந்துகொண்ட போது, நாம் அவரை வீட்டுக்கு அனுப்பினோம். இன்றும்கூட நமது வலிமை குறைந்து விடவில்லை. எனினும், கொள்கை முடங்கிப் போனால், வலிமை குன்றிவிடும். எனவே, நாம் நம்மை வலிமை உடையவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.”
இவ்வாறு துஷார் காந்தி பேசியுள்ளார்.