சாமியார் நித்யானந்தா மீது 6 பிரிவுகளின் கீழ் குஜராத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நித்யானந்தா ஆசிரம பள்ளியில் கடத்திச் செல்லப்பட்டு சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்கள் 2 மகள்களை மீட்டுத்தரக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் பெற்றோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன் சர்மா என்பவரும், அவரது மனைவியும் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:
பெங்களூருவில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனத்தில் எங்கள் மகள்கள் 2013-ம் ஆண்டு முதல் படித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் அகமதாபாத்தில் உள்ள நித்தியானந்தா கல்வி நிறுவனத்தின் கிளைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் அங்கு படித்த வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு எங்கள் மகள்களை சந்திக்கச் சென்றோம். ஆனால் எங்களது 3 மகள்களை சந்திக்க எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு காவல்துறையிடம் புகார் அளித்தோம். அவர்கள் வந்து விசாரித்து விட்டுச் சென்றனர். ஆனால் எங்கள் மகள்களை மீட்டுத்தரவில்லை.
அந்த பள்ளியின் நிர்வாகிகள் எங்கள் மகள்கள் வீட்டுக்கு செல்ல விரும்பவில்லை எனக் கூறுகின்றனர். எங்கள் மகள்கள் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். எங்கள் மகள்களை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். குஜராத் போலீஸாருக்கு இதுதொடர்பாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆசிரமத்தில் வெளியேறிய சர்மாவின் மகள் நன்கொடையாளர்களிடம் பேசி 1 முதல்4 கோடி வரை டார்கெட் வைத்து நன்கொடை வசூலிக்க கட்டாயப்படுத்துவதாக வெளிப்படையாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து தற்போது நித்யானந்தா உள்ளிட்ட 3 பேரிடம் கடத்தல், மிரட்டல், சித்ரவதை செய்தல், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குஜராத் காவல்துறையினர் செய்துள்ளனர்.