மங்கிரோல், மே 2 -தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில், மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானியின் செய்த முறைகேடுகளுக்கு துணைபோனதாக குஜராத் அரசு அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு ரூ. 5 கோடி வரை நிதி ஒதுக்கப்படுகிறது. அந்த வகையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட் டத்திலுள்ள மங்கிரோல் கிராமத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து, அதற்கான ஒப் பந்தத்தை, சாரதா மஜ்தூர் சகாகாரி மண்ட்லி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஸ்மிருதி இரானி வழங்கியிருந்தார்.பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுப் பணிகளைப் பொறுத்தவரை, ரூ. 50 லட்சத்திற்கு உட்பட்ட பணிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்க வேண்டும். ஆனால், சாரதா மஜ்தூர் சகாகாரி மண்ட்லி நிறுவனத்திற்கு ரூ. 1 கோடியே 23 லட்சத்திற்கு ஒப் பந்தங்கள் வழங்கப்பட்டது.இது முதல் தவறு என்றால், அப்படி வழங்கப்பட்ட ஒப்பந்தப் பணிகளை, 2 ஆண்டுகளாகியும் சாரதா மஜ்தூர் நிறுவனம் முடிக்காதது மற்றொரு பிரச்சனையாக மாறியது. மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகமும் இதனைக் குறிப்பிட்டு கண்டித்தது.இதையடுத்து, ஸ்மிருதி இரானியின் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகளை விசாரிப்பதுடன், கூடுதலாக செலவழிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. செவ்வாயன்று இவ்வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்போது, வரம்பை மீறி நிதி ஒதுக்கீடுசெய்ததற்காக, அரசு அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்திருப்பதுடன், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கும் நடவடிக்கைத எடுத்துவருவதாக, குஜராத் அரசு பதில்அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் அரசு காலங்கடத்துவதாக கூறிய நீதிமன்றம், சாரதா மஜ்தூர் நிறுவனத்தின் சொத்துக்களை ஜப்தி செய்யாததற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது.