tamilnadu

img

வங்கி பணத்தை கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர்கள்

ஈரோடு:
சேலம் விவேகானந்தா ரோட்டில் sis rosegur holdings (p) ltd என்னும் நிறுவனம் இயங்கிவருகிறது. குறிப்பிட்ட சில வங்கி களிடம் ஒப்பந்தம் செய்து பணத்தைப் பெற்று, அவர்களுடைய ஏ.டி.எம்களில் ஊழியர்களைக்கொண்டு பணத்தை நிரப்புவதை இந்த நிறுவனம் செய்து வந்திருக்கிறது. அப்படி ஊழியர்கள் மூலம் ஏ.டி.எம்களில் நிரப்பப்பட்ட பணத்தின் விவரத்தை, கிளை மேலாளரான  சாம் மகேஷ்குமார் கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தணிக்கை செய்திருக்கிறார். 

அப்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.எம்களுக்கு நிரப்புவதற்காக  அனுப்பப்பட்ட பணத்திற்கும், ஏ.டி.எம்களில் நிரப்பப்பட்ட  பணத்திற்கும் பெரும் வித்தியாசம் இருந்திருக்கிறது. அதனையடுத்து, ஈரோட்டிலுள்ள ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏழு ஏ.டி.எம்களில் நிரப்ப அனுப்பப்பட்ட பணத்தில் 55,78,500 ரூபாய் பணம்  காணாமல் போயிருப்பது தெரியவந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட ஏ.டி.எம்களில் பணத்தை நிரப்பியபோது, பொறுப்பில் இருந்த ஊழியர்கள் இருவரை அழைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர். 

விசாரணையில், ‘ஏ.டி.எம் இயந்திரங்களில்  நிரப்புவதற்காகக் கொண்டுசென்ற பணத்தை சொந்தச் செலவுகளுக்காக கையாடல் செய்ததாகவும், அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்து
விடுவதாகவும்’ அதிகாரிகளிடம் கூறியதோடு, ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கின்றனர். அதனையடுத்து, பிப்ரவரி மாதம் 29-ம் தேதி  வரை 8 தவணைகளாக 5,12,000 ரூபாயை மட்டுமே கொடுத்திருக்கின்றனர். மீதமுள்ள 50,66,500 ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கின்றனர்.இதனையடுத்து, ‘கையாடல் செய்த பணத்தை மீட்டுத் தாருங்கள்’ என நிறு வனத்தின் கிளை மேலாளரான சாம் மகேஸ்குமார், ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து ஈரோடு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கையாடல் செய்த ஊழியர்களான அழகேசன், பிரகாஷ், முருகானந்தம் மற்றும் கையாடல் செய்த பணத்தை வைத்திருந்த வினோத் ஆகிய 4 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.