tamilnadu

ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவித்திடுக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு, ஏப்.12-ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை உடனடியாக அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்க 4 ஆம் மண்டல கூட்டம், மாநிலத் தலைவர் பசுபதி தலைமையில் ஈரோட்டில் வெள்ளியன்று நடைபெற்றது. இதில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது வரவேற்கிறோம். ஈரோட்டில் அரசு கல்லூரி ஏதும் இல்லாத நிலையிலும், கல்லூரிகளுக்கு நிர்வாக முகமை ஏதும் இல்லாத நிலையிலும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை உடனடியாக அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு வழங்க வேண்டும். தமிழக அரசு அண்மையில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவன அனுமதி அளித்துள்ளதை கண்டிக்கிறோம். தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி மேலும் வணிகமாகும் என்பதால் இந்த அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.


இயங்க இயலாத சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை தொடங்க அகில இந்திய தொழில் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) அனுமதி வழங்கியுள்ளதை கண்டிக்கிறோம். இந்த அனுமதியால் கலை, அறிவியல் கல்லூரிகளில் செயல்பாடுகளில் குழப்பம் ஏற்படும். இதனால் அந்த அனுமதியை ஏஐசிடிஇ திரும்பப் பெற வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட கல்வித் தேர்வு மறு மதிப்பீடு கட்டணங்களை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப்பெற வேண்டும். பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை ஆட்சிக்குழு இரண்டாம் ஆண்டு துணைவேந்தர் தேடுதல் குழுவிற்கு பிரதிநிதிகளை நியமனம் செய்துள்ள நிலையில், தமிழக அரசு உடனடியாக பிரதிநிதியை நியமனம் செய்து துணைவேந்தர் நியமனத்தை துரிதப்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பெரியார் பல்கலைக் கழகத்தில் காணாமல் போன கோப்புகளை கண்டுபிடிக்கவும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


நிர்வாகிகள் தேர்வு

இதில் மண்டலத் தலைவராக சிவகாமி, செயலாளராக மோகனசுந்தரி, இணை செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக நிர்மலாதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.