tamilnadu

img

ஒரு வாக்காளருக்கு 11 அடையாள அட்டைகள் வெவ்வேறு வரிசை எண்கள்

ஈரோடு, ஏப்.3- ஒரே வாக்காளருக்கு வெவ்வேறு வரிசை எண்களுடன் 11 அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற பொதுத்தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளதா? என்று சோதனை செய்து வருகிறார்கள். கட்சி நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் வாக்காளர்கள் பட்டியலை எடுத்துக்கொண்டு வீடு வீடாக சென்று வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருப்பதை உறுதி செய்தும், பட்டியலில் இல்லாதவர்களை நீக்க கோரியும் வருகிறார்கள்.இந்தநிலையில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி, ஈரோடு மாநகராட்சி 2–ம் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் இதுபோன்று வாக்காளர் பட்டியலில் முனியப்பன் கோவில் பகுதியில் வீட்டு எண் 2 என்ற முகவரியில் குப்புசாமி த/பெ.வெங்கடாசலம் என்ற பெயர் தொடர்ச்சியாக 11 கட்டங்களில் உள்ளது. அனைத்து கட்டங்களிலும் ஒரே புகைப்படம், ஒரே முகவரி, ஒரே பெயர். ஆனால் வாக்காளர் அடையாள அட்டை எண்கள் மட்டும் வெவ்வேறாக உள்ளன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் சி.கதிரவனுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் மனு அனுப்பி உள்ளார்.