பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் ஊதியப் பிரச்சினையை முன்வைத்து இரண்டு நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உலகின் முன்னணி விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விமான சேவை அளித்து வருகிறது. ஆனால், அந்நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகளுக்கு முறையே ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதாகவும், ஆண்டு விடுப்பு நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் விமானிகள் தரப்பில், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானிகள் சங்கத்தில் புகார் கூறப்பட்டது.
இது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் விமானிகள் சங்கம் சார்பாக முன்வைக்கப்பட்ட நிலையிலும், ஊழியர்களின் கோரிக்கைக்கு அந்நிறுவனம் செவி கொடுக்கவில்லை. இதை அடுத்து, செப்டம்பர் மாதம் 9 ,10 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களில், வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அண்மையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திடம் இதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், விமானிகள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெரும்பாலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.