கொரோனா வைரசால் பாதிக்கப் பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் ஜூலை 5-ஆம் தேதி சிகிச்சைக்காக வந்தவர் தோழர் இ.இராமநாதன். போதிய சிகிச்சை இல்லை என்கிற பின்னணியில் இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ச்சியாக மூச்சுத்திணறல், அவருடைய நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜூலை 15 (புதன்) காலை சுமார் பத்து முப்பது மணி அளவில்அவர் உயிர் பிரிந்தது.
1989ஆம் ஆண்டு முகபவுடர் உள்ளிட்ட சிலபொருள்களின் விற்பனை முகவராக அறிமுகமானவர் தோழர் இராமநாதன். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அன்றைய செயல்பாடுகளைப் பார்த்து சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர். லஞ்சம் ஊழல் இவற்றுக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டி ஒரு அமைப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்பினார். ஒரு அமைப்பின் மூலம் இவற்றை எல்லாம் எதிர்க்க முடியும் என்ற கோட் பாட்டை ஏற்றுக் கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தொடர்ந்து மக்கள் மத்தியில் செயல்பட்டு வந்தார். கேபிள் டிவி தொழில் மூலம் அந்த பகுதி முழுவதும் மக்களுடன் தொடர்புகொண்டு செயலாற்றினார். கேபிள் டிவி தொழிற்சங்கத்தை கட்டியதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியவர் அவர். கேபிள்டிவி நடத்தக்கூடிய வெள்ளகுளம் என்கிற பகுதியில் சங்கரமடத்திற்கு அருகாமையில் வசித்த மக்களுடைய வீட்டுமனைப்பட்டாவிற்காக, சாலை வசதிக்காக, தண்ணீர் பிரச்சனைக்காக என - அந்த பகுதியில் கணிசமாக இருந்த காட்டுநாயக்கன் சமூக மக்களினுடைய சமூகசான்றுக்காக விடாப்பிடியாக போராடியவர்.
ஒவ்வொருவரோடும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட அவர், அந்த தொடர்பு முழுவதும் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களாக மாற்றினார். அவர்சிபிஎம் காஞ்சிபுரம் நகரக் குழுவிற்கு தேர்வு செய்யப் பட்டு கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக காஞ்சி நகர்குழுவில் செயல்பட்டு வருகிறார். பெரிய காஞ்சிபுரம் பகுதியில் அப்பள தொழிற்சங்கத்தை உருவாக்கவும் இஸ்லாமிய மக்களை கட்சிக்குள் கொண்டுவருவதற்கும் பல்வேறு பகுதிகளில் புதிய கட்சி ஊழியர்களைக் கொண்டு வருவதற்கும் இராமநாதன் மிகச்சிறந்த பாலமாகத் திகழ்ந்தார். பெரிய காஞ்சிபுரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எந்த ஒருநிகழ்வாக இருந்தாலும் அவரே முதன்மைப் போராளியாக இருந்தார்.
தொடர்ந்து மக்களிடத்தில் செயல்பட்ட காரணத்தினால் 2001 ஆம் ஆண்டு காஞ்சி நகரத்தில் உழைக்கும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய 14 ஆவதுவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தனியாக நின்று கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய மக்கள் செல்வாக்கால் சொந்த பலத்தில் உள்ளே சென்ற முதல் கவுன்சிலர் தோழர் இராமநாதன்.
நகராட்சியை தனது போராட்டக் களமாக மாற்றினார். கொசு பிரச்சனையா - கொசுவலையோடு சென்றார். குப்பைகள் குவிகிறதா, குப்பைகளை அள்ளி கொண்டுபோய் நகராட்சியில் முற்றுகை போராட்டத்தை நடத்தினார். நகராட்சியில் அவரைப் பேசவிடாமல் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். கமிஷன் கொடுத்து அவரை அடக்கப் பார்த்தார்கள். கமிஷன் வாங்காத ஒரே கவுன்சிலர் கம்யூனிஸ்ட் கவுன்சிலர்தான் என்ற பெயர் பெற்றார் தோழர் இராமநாதன்.நகராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட பிறகு அன்றைய அதிமுக அரசாங்கத்தினுடைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெற்ற தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தில்முதல் கட்ட பேரணியில் நாங்களெல்லாம் பங்கேற்று கைதாகி, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் மண்டபத்தில் அடைக்கப்பட்ட பின்னணியில், புதிதாக 20 இளைஞர்களைத் திரட்டிக் கொண்டு கட்சிக் கொடியையும் வாலிபர் சங்கக் கொடியையும் கையில் பிடித்துக்கொண்டு காஞ்சிபுரத்தின் பிரதான காந்தி சாலையில் ஊர்வலமாக சென்றார். எதுவும் நடக்கவில்லை என்று காட்டுவதற்கு ஆசைப்பட்ட ஆளுங்கட்சியினருக்கு, இராமநாதனின் செயல் அதிர்ச்சியாக இருந்தது.
அன்றைய வனத்துறை அமைச்சராக இருந்த திருநாவுக்கரசு தலைமையில் உள்ளூர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள்பின்தொடர்ந்து இராமநாதனை இரும்புத் தடியால் தாக்கினார்கள். மண்டை உடைந்தது. உயிர்பிரியும் அளவிற்கு பாதிப்பான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிசயிக்கத்தக்க வகையில் அவர் உயிர் பிழைத்து வந்தார். இனி கம்யூனிஸ்டுகள் போராடினால் இப்படித்தான் இராமநாதனைப் போல் மண்டை உடைக்கப்படும் என்றெல்லாம் அதிமுகவினர் அன்றைக்கு பொதுக்கூட்டங் களில் மிரட்டினார்கள். ஆனால் எந்த தாக்குதலுக்கும் கலங்காத கம்பீரமான போராட்டக்காரன் இராமநாதன். தொடர்ச்சியாக அவர் உடல் பாதிக்கப்பட்ட நிலையிலும் விடாப்பிடியாக கட்சிப் பணிகளில் செயல்பட்டார். 2002ஆம்ஆண்டு கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் மத்தியில் அதிகபட்ச தீக்கதிர் சந்தாக்களை சேகரித்து கொடுத்து சாதனை படைத்தவர் தோழர் இராமநாதன். தொடர்ந்து தீக்கதிர் சந்தாக்கள் சேகரித்துத் தருவது, காஞ்சிபுரம் நகர கட்சிப் பணியில் எந்த ஒரு வேலையையும் இது என்னுடைய வேலையில்லை என்று சொல்லவே மாட்டார். எதைக் கொடுத்தாலும் திறன்பட எடுத்துக்கொள்வார்; ஆர்வமாக செயல்படுவார். இந்தப் பின்னணியில்தான் காஞ்சிபுரத்தில் பத்திரிக்கை துறையில் செயல்பட வேண்டும். மக்களோடு மிக நெருக்கமாக செல்வதற்கான வாய்ப்புகள்இதில் மட்டுமே இருக்கிறது என்கிற முடிவு செய்திருப்பதாக தானே தீக்கதிர் நிருபராக செயலாற்ற முன்வந்தார்.
குடும்பம், இரண்டு மகன்கள், வருவாய் தேவை இருந்தபோதிலும் தனக்கான நேரம் முழுவதும் ஒதுக்கி அதற்காக நான் செயல்படுகிறேன் என்கிற முறையில் காஞ்சிபுரம் மாவட்ட தீக்கதிர் நிருபராக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். சத்தியம் தொலைக்காட்சி, வெளிச்சம் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளுக்கும் செய்தி வழங்குவதில் பொறுப்பெடுத்து செயல்பட்டார். இதன் காரணமாக மக்களுடன் நெருக்கமாக இருந்து, அனைத்து நிருபர்கள் மத்தியிலும் மதிப்பு மிக்கவராக மாறினார். பத்திரிகையாளர் சங்கத்தையும் வலுவாக கட்டுவதில் செயல்பட்டார். காஞ்சிபுரத்தில் நிருபர்கள் மத்தியில் தோழர் இராமநாதனுக்கு தனி மதிப்பு உண்டு. அவருடைய ஒரே சகோதரரும் நிருபர் ஆவார். கடைசியாக சில செய்திகளை சேகரிப்பதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றார். தொடர்ச்சியாக அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் சுணக்கம் உள்ளது; ஆட்சியரின் மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் உள்ள பிரச்சனைகள் பற்றியெல்லாம் சேகரித்து செய்தியாக தீக்கதிரில் எழுதினார்.
இந்த செய்திகளை சேகரிப்பதற்காக அலைந்து கொண்டே இருந்த போதுதான் கொரோனா வைரஸ் அவரை எப்படியோ ஆக்கிரமித்துவிட்டது.அரசு மருத்துவமனையிலும், பின்னர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவரது நுரையீரல் செயல்பாடு பெருமளவு பாதிக்கப்பட்ட பின்னணியில் கடைசியாக போடக்கூடிய ரத்தத்தை உறைய வைத்து எளிமைப்படுத்தக்கூடிய உயிர் பாதுகாப்பு மிகுந்த மருந்து இப்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் இல்லை என்கிற செய்தி வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் பெரும் முயற்சி எடுத்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எப்படியாகினும் சேர்ப்பதற்காக சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் உள்பட கடுமையாக முயற்சி செய்தோம். செங்கல் பட்டு மருத்துவமனையில் அங்கு இருக்கிற மருத்துவ தோழர்கள் மூலமாக காப்பாற்ற முயற்சி எடுத்தோம். ஆனால் அந்த மருந்துகள் எல்லாம் அவருடைய உடல்ஏற்றுக்கொள்ளாது என்கிற தகவல் வந்து எங்களை உலுக்கிவிட்டது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான ஒரு ஊழியரை காஞ்சி மாநகரம் இழந்திருக்கிறது. தீக்கதிர் பணிக்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் தானாக விரும்பி வந்து செயல்பட்டவர்.தோழர் இராமநாதன், என்றென்றும் நீ எங்களுடன் இருப்பாய், செவ்வணக்கம்.
படம் - தீக்கதிர் காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் தோழர் இ.இராமநாதன் மறைவுக்கு தீக்கதிர் நாளிதழ் அஞ்சலி செலுத்தியது. மதுரை அலுவலகத்தில் வியாழனன்று கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர் ப.முருகன் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன் ஆகியோர் பேசினர்.
===இ.முத்துக்குமார்===
மாநிலச் செயலாளர், சிஐடியு