மதுரை,ஏப்.30-புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரம் ரத்து செய்யப்படுவ தாகவும் முதல்வரின் அதிகாரத்தில் அவர் தலையிட முடியாது என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார். இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அத்தீர்ப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்பதை உறுதி செய்தது. முதலமைச்சர், அமைச்சர்கள் எடுக்கும் முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்றும் அரசின் அன்றாட நடவடிக்கைகளிலும் ஆளுநர் தலையிட முடியாது என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி, புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அதீதமாக தலையீடு செய்வதால் தில்லி தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்து வந்தார்.ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு மாற்றாக கருத்து வெளியிட்டது. அத்துடன், ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கருத்து தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புதுச்சேரி முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான லட்சுமிநாராயணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.அரசின் அன்றாட நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும் வகையில் துணை நிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த வழக்கில் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.இவ்வழக்கில் செவ்வாயன்று (ஏப்.30) தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி மகாதேவன், “முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என்று கூறினார்.“யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கை களில் தலையிடும் வகையில் துணை நிலைஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படு கிறது”எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம், வேணுகோபால், சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர்.