இடஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறவர்களின் கொண்டாட்டம் அவர்களின் மௌனத்தை மீறித் தெரியவே செய்கிறது. தீர்ப்பை விமர்சித்தும் கருத்துகள் வருகின்றன. இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அரசமைப்பு சாசனத்தில் உரிய மாற்றம் கொண்டுவரவும் கோரப்படுகிறது. தமிழகத்திலிருந்து சென்ற வழக்கு என்பதால் சரியான தீர்ப்பைப் பெற மாநில அரசும் முனைந்து செயல்பட வலியுறுத்தப்படுகிறது.இந்திய அரசமைப்பு சாசனத்தில் அடிப்படை உரிமைகளைச் சொல்லும் சட்டப் பிரிவுகளில் “இட ஒதுக்கீடு” என்ற சொற்கள் இடம்பெறாமல் போயிருக்கலாம். 14 முதல் 35 வரையிலான சட்ட உரைகள் அடிப்படை உரிமைகள் பற்றிக் கூறுகின்றன. 14 வரை சட்ட உரை உறுதிப்படுத்துகிற முதலாவது அடிப்படை உரிமையே “சமத்துவத்துக்கான உரிமை” என்பதேயாகும். அதற்கான விளக்கமாக, “சட்டத்தின் முன் சமத்துவம், மதம் சாதி இனம் பாலினம் பிறந்தஇடம் என்ற அடிப்படையில் பாகுபாடுகள் தடுப்பு, வேலை வாய்ப்பு விசயங்களில் சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு, அவமதிக்கும் பட்டப்பெயர் ஒழிப்பு முதலியவை சொல்லப்பட்டுள்ளன.
பாகுபாடுகள் தடுப்பு என்பதே சமூகநீதி. அதை அடைவதற்கான வழிதான் வேலைவாய்ப்பில் சமத்துவம். அதற்கான ஒரு சட்ட ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு.சமத்துவம் முதலாவது அடிப்படை உரிமை யெனில், வேலை வாய்ப்பு அதற்கானதொரு வழியெனில், அந்த வழியைப் பெறுவதற்கான இட ஒதுக்கீடு அந்த அடிப்படை உரிமையோடு இணைந்ததுதானே? சாசனத்தின் 15வது சட்ட உரை, குடிமக்களில் சமூகமாகவும் கல்வியிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களும் பட்டியல் சாதிகள், பழங்குடி களைச் சேர்ந்தோரும் முன்னேறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொள்வதைச் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது என்று தெளிவுபடுத்துகிறது. அப்படியொரு சிறப்பு ஏற்பாடுதான் இட ஒதுக்கீடு.
29, 30வது சட்ட உரைகள் பண்பாட்டு உரிமையையும் கல்வி உரிமையையும் அடிப்படை உரிமையாக்கியுள்ளன. அரசு நடத்துகிற அல்லது அரசு நிதியுதவி பெறுகிற கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கையில் மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் என்ற அடிப்படைகளில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதுதானே இவற்றின் சாரம்? அவ்வாறு பாகுபடுத்தப்படுவதைத் தடுக்கிற, நீண்ட நெடுந்தலைமுறைகளாகப் பாகுபடுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுதானே இட ஒதுக்கீடு? அடிப்படை உரிமைகள் மீறப்படுகிறபோதெல்லாம், கைவிடப்படுகிறவர்களுக்கு ஆதரவாக அரசமைப்பு சாசனம் துணைக்கு வரும் என்கிற ஏற்பாடுதான் 32வது சட்ட உரை. சாதியின் பெயரால் வேலைவாய்ப்புகள் மறுக்கப்பட்ட வரலாற்றுக் கொடும் பிழையைத் திருத்துகிற ஏற்பாடாகிய இடஒதுக்கீடு புறக்கணிக்கப்படுகிறபோது இந்தச் சட்ட உரைதான் நம்பிக்கை.
பிறகு எப்படி உச்சநீதிமன்ற நீதிபதி இது அடிப்படை உரிமையல்ல என்று தீர்ப்பளித்து, 32வது சட்ட உரையின் கீழ் எப்படி தீர்வு கோரி வந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார் என்பதுதான் புரியவில்லை. ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் ஒரு விரிவான அமர்வு இது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஒற்றை நீதிபதி அமர்வு இப்படிக் கேட்கிறது என்றால் விரிவான அமர்வின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்வதாகத்தானே பொருள்? சாசனமோ, நீதிமன்றமோ அதை அனுமதிக்கிறதா?
தீர்ப்புகள் நீதியை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதுவும் சமூகநீதியில் பின்வாங்கலுக்கு இடமில்லை என்பதை உச்சநீதிமன்றம் நிறுவியாக வேண்டும். அதைச் சட்ட வழிகளோடு இணைந்து சமுதாயத்தின் மனசாட்சியும் உறுதிப்படுத்தட்டும்.