திண்டுக்கல், மே 29 -குடிநீர் பிரச்சனையை கவனிப்பதை விட வேறு என்ன வேலை என்று தமிழக அரசுக்குமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். திண்டுக்கல்லில் செவ்வாயன்று செய்தி யாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:ஏதோ கோதாவரியையும் காவிரியையும் இணைப்பதாக நிதின்கட்கரி சொல்லிவிட்டார் என்று அதற்கு விழுந்து விழுந்து சிலர் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். என்றைக்கு காவிரியும் கோதவரியும் இணைவது, என்றைக்கு தண்ணீர் வருவது? நாளைக்கு மழை பெய்தால் கூட ஒரு சொட்டு தண்ணீரை தேக்க நம்மிடம் திட்டமில்லை. இருக்கிற குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் மண்மூடிக்கிடக்கின்றன. எனவே போர்க்கால அடிப்படையில் குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தினால்தான் எதிர்காலத்தில் மழை நீரை தேக்க பயன்படும். போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்குவதற்கும், நீர்நிலைகளை தூர்வாரவும் தமிழக அரசு முன்வரவேண்டும். 8 வழிச்சாலையில் தமிழக அரசின்நடவடிக்கைகளை நீதிமன்றம் கண்டித்துள் ளது. அதற்கு பிறகும் நாங்கள் எங்களை மாற்றிக்கொள்ள மாட்டோம் என்றால், தமிழக அரசை என்ன செய்வது? அதிமுக அரசுக்குமக்களைப் பற்றி என்ன கவலை உள்ளது? 8 வழிச்சாலையை விட மக்கள் குடிநீருக்காக தவிக்கிறார்கள். விவசாயிகள் நொந்துபோய் உள்ளனர். எட்டுவழிச்சாலைக்கான ரூ. 8 ஆயிரம் கோடியை தமிழகத்தின் நீர்நிலை களுக்காக செலவிடலாம். 8 வழிச்சாலையில் பெருந்தொகை கையூட்டாக கை மாறி யிருக்கிற காரணத்தால் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள். 8 வழச்சாலை முக்கியமா? ஏரிக்குளங்களை ஆழப்படுத்து வது முக்கியமா?
பாக்கி தண்ணீரையும் சேர்த்து வழங்குக!
தில்லியில் காவிரி ஆணைய ஒருங்காற்றுக்குழுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே ஒழுங்காற்றுக்குழு சிபாரிசு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.2 டிஎம்.சி. தண்ணீரை மே மாத இறுதிக்குள் அல்லது ஜுன் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று ஆணையம் ஏகமனதாக முடிவெடுத்து, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. கர்நாடக அரசு உடனடியாக அந்த 9.2. டிஎம்.சி. தண் ணீரை திறந்துவிட வேண்டும். அதேபோல் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நமக்கு அளிக்க வேண்டிய பாக்கி தண்ணீரையும் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அந்த தண்ணீரையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
பொள்ளாச்சி விவகாரம் : சிபிஐ விசாரணையில் அதிருப்தி
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலி யல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிசிஐடி விசாரித்தார்கள். பிறகு தமிழக அரசாங்கமே மத்திய அரசின் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. தற்போது சிபிஐ முதல்குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே சிபிசிஐடி என்ன குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்களோ, எத்தனை பேரை கைது செய்தார்களோ, அதே 5 பேரின் மீது தான் இப்போது சிபிஐ வழக்கு பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. சிபிஐவிசாரணைக்கு பரிந்துரைப்பதன் மூலமாகநாம் என்ன எதிர்பார்த்தோம்; இந்த குற்றப் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள், இதில் யார் யார் அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள், கடந்த 7 ஆண்டுகளாக நடந்திருக்கிற சம்பவங்களுக்கெல்லாம் என்ன பின்னணி - என்று எல்லா விவரங்களும் தெரியவரும்; உண்மையான விசாரணை நடைபெறும் என்று நம்பினோம். இதில் சம்மந்தப்பட்ட அனைத்துகுற்றவாளிகளும் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு நேர் விரோதமாக நடைபெற்று உள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கும் சிபிஐ விசாரணைக் கும் எந்த வேறுபாடும் இல்லை. எனவே சிபிஐ விசாரணை என்பது முழுமையாக விசாரணை யாக நடைபெற வேண்டும். அனைத்து குற்ற வாளிகளையும் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை
தனியார் பள்ளிகளில் ஒரு வரைமுறை இல்லாமல் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டண நிர்ணய குழுவெல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுத லான கட்டணத்தை தனியார் பள்ளிகளில் வாங்குகிறார்கள். அரசாங்கமே ஒரு குழுவை அமைத்து இந்த இந்த வகுப்புக்கு இந்த இந்த கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று வரையறுத்துச் சொன்னபிறகு அதனை மீறி தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் செய்வதை அதிமுக அரசாங்கம் ஏன் கேட்க மறுக்கிறது? ஏன் தடுப்பதில்லை? தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டால் பெற்றோர்கள் பெரிதும் கவலை அடைந்துள்ளார்கள். கூடு தல் கட்டணங்களை வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுக்க அரசு முன்வரவேண்டும்.
காலவிரயம் செய்யும் முதல்வர்
தமிழகத்தில் பாஜக - அதிமுக அணி மிகப்பெரிய தோல்வியடைந்துள்ளது. இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஒரு ஆட்சி மாற்றம் வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வரிந்து கட்டிக்கொண்டு எல்லா எம்எல்ஏக் களையும் சரிக் கட்டுவதிலேயே தான் கவனம் செலுத்துகிறார்கள்; மக்கள் சந்திக்கக்கூடிய மிக முக்கியமான பிரச்சனைகளில் ஆட்சி யாளர்கள் கூடுதலான கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை மாறியிருக் கிறது. விடிந்து எழுந்தால் குடிப்பதற்கு எங்கே தண்ணீர் கிடைக்கும் என்று அலைகிற நிலைமை தான் உள்ளது. ரூ.20, ரூ.30 கொடுத்தால் கூட ஒரு குடம் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த குடிநீர் பிரச்சனையைப் போக்க அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்கூட்டியே யோசித்து இதற்கான திட்டமிடல் இருந்திருந்தால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
விருந்தாளி போல எடப்பாடியும், பன்னீர்செல்வமும்
தமிழக முதல்வரும், துணை முதல்வரும் தில்லியில் இருந்தாலும், தமிழக மக்களைப்பற்றி கவலைப்படமாட்டார்கள். இங்கிருந்தாலும் கவலைப்படப் போவதில்லை. பிரதமர்பதவி ஏற்பு விழா 30ம் தேதி(வியாழன்) நடை பெறுகிறது. முதல் நாள் புறப்பட்டு போனால் அடுத்த நாள் வந்துவிடலாம். விருந்தாளி போலஅங்கேயே அமர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ஒரு மாநில முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம். ஒருவரால் செயல்பட முடியாது என்பதற்காகத்தான் துணை முதலமைச்சர் பதவி கொண்டு வந்தார்கள். எவ்வளவோ பணிகள் இங்கு உள்ளன. மக்கள் படாத பாடு படுகிறார்கள். 3ம் தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் எந்த பள்ளிக்கூடத்திலும் தண்ணீர் இல்லை. கழிப்பிட வசதி கிடையாது. எப்படி பள்ளிக்கு குழந்தைகள் போவார்கள்? 500 குழந்தைகள் படிக்கும் இடத்தில் எவ்வளவு தண்ணீர் தேவைப்படும்? எந்தப் பள்ளிக்கூடத்தில் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து ஊற்றுவார்கள்? அனைத்து மாணவ, மாணவியர் களும் தண்ணீர் இன்றி கடுமையான சிரமத்திற்கு உள்ளாகப் போகிறார்கள். அதைப் பற்றி கவலைப்பட தமிழக அரசில் யாரும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
(ந.நி.)