திண்டுக்கல்:
கொரோனா நோய் தொற்று காரணமாக பலியான மக்களை அடக்கம் செய்வதில் மதம், இனம், மொழிகளைக் கடந்து முஸ்லிம் இளைஞர்கள் மனிதநேயத்தோடு சேவையாற்றி வருகிறார்கள்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்புஒரு முதியவர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்தார். அவரது உடலை கொண்டுசெல்ல ஒரு ஆம்புலன்ஸ் நின்று கொண்டிருந்தது. ஒரு இறப்பு நேர்ந்தால் கூட கூட்டம் அலைமோதும் சவக்கிடங்கில், நான்கைந்து பேர் மட் டுமே கொரோனா பாதுகாப்பு கவச உடைகளுடன் நின்றிருந்தனர். விசாரித்த போது அவர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகஇளைஞர்கள் என்பது தெரியவந்தது. கொரோனா பணி குறித்து திண்டுக்கல் மாவட்ட தமுமுக முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் யாசர் அராபத் கூறுகையில், கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில்சாகுல்ஹமீது, ஷேக்பரீத், ஜாபர்சாதிக், முஹமது ஆரிப், இப்ராஹிம்,காதர்ஷெரீப், சாதிக்அலி உள்ளிட்ட10 பேர் கொண்ட குழு செயல்படுகிறது. கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களை திண்டுக்கல் பேகம் பூர் கபர்ஸ்தானில் அடக்கம் செய்வதாகவும் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 13 பேர் முஸ்லிம்கள். கொரோனா பாதிக்காத இரண்டு உடல்களையும் அடக்கம் செய்துள்ளனர்.கொரோனா குறித்து மக்கள் மத்தியில் பீதி இருக்கிறது. இருந்தாலும் கொரோனாவால் இறந்தவர் களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை அவரவர் மத சடங்குகளுடன் அடக்கம் செய்கிறோம் என்றார்அவர்.
தஞ்சாவூர் மாவட்ட பாஜக செயலாளரான இளங்கோவன் என்பவரதுஉறவினரான கருணாநிதி என்பவர்,கொரோனாவிற்கு பலியானார். தஞ் சாவூர் அரசு மருத்துவ மனையில் இறந்த அவரது உடலைப் பெற்று உரிய மரியாதையுடன் அடக்கம் செய்தோம்.கும்பகோணத்தில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம்பார்த்து வந்தவர் டாக்டர் விஷ்ணுபிரியா. மூத்த மருத்துவரான அவர்சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு
ஆளாகி தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார். அவரது உடல் சொந்த ஊரான கும்பகோணம் அருகேயுள்ள அவரது சொந்த கிராமத்தில் எங்கள் அமைப்பினரால் அடக்கம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்களே கூட கொரோனாவில் இறந்தவர்களை அடக்கம் செய்யவோ, அருகில் வரவோ பயந்துஒதுங்கியிருந்தனர். அவர்களை அழைத்து எங்கள் குழுவினர் விழிப்புணர்வூட்டி களத்தில் இறக்கியுள் ளோம். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; கொரோனா பாதித்து இறந்த பிற மதங்களைச்சேர்ந்தவர்களையும் நாங்கள் அவர்களது மதச் சடங்குகளின்படி அடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம். தற்போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களை மின்மயானத்திற்கு எடுத்துச் சென்றுஅடக்கம் செய்கிறார்கள். இறந்தவர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம். மனித நேயத்துடன் இந்தப்பணியில் ஈடுபட்டுள்ளோம். மனிதநேயம் இந்த சமூகத்தில் வளர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும்அவர் கூறினார். (ந.நி.)