தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டத்துக்குட்பட்டு மொட்டாங்குறிச்சி ஊராட்சியில் நத்தமேடு,பெத்தானூர், பச்ச அள்ளிபுதூர், காந்திநகர் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில்நத்தமேடு கிராமத்தில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தையொட்டி 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசிக்கின்றன. மொத்தமுள்ள 2,500 வாக்குகளில், 400 வாக்குகள் நத்தமேடு அருந்ததியர் மக்களின் வாக்காகும்.
அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு
அதேநேரம், நத்தமேடு அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி ஆண்டாண்டு காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நத்தமேடு அருந்தியர் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. ஆனால், நத்தமேட்டில் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் தட்டுப்பாடியின்றி வழங்கப்படும். அங்கு தண்ணீர் பிடித்து மீதமானால், வாரத்திற்கு ஒருநாளோ அல்லது மாதத்திற்கு இரண்டு முறையோ அருந்ததிய மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும்.மேலும், இங்கு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் தண்ணீர் வரததால் அதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதனால் இயற்கை உபாதைகளுக்காக பெண்கள் வயக்காட்டை நோக்கி செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இதனால்இளம்பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருகிறது. மேலும், இக்கிராமத்துக்கென சுடுகாடு உள்ளது. ஆனால், சடலத்தை எடுத்துச் செல்ல முறையான பாதை இல்லை. ஒத்தையடி பாதையில் எடுத்து செல்லும் அவலம் தொடர்ந்துவருகிறது. இதேபோல், இக்கிராமத்துக்கு சாக்கடை கால்வாய் அமைக்கப்படாததால் சாக்கடை கழிவுநீர் தெருச்சாலையிலேயே நிற்கும் அவலம் தொடர்கிறது. மேலும், தெருவிளக்கு இல்லாமல் இரவில் இருண்ட பகுதியாக அப்பகுதி இருந்து வருகிறது.ஏனெனில், மொட்டாங்குறிச்சியின் ஊராட்சி மன்ற தலைவராக ஆதிக்க சமூகத்தினர்தான் வரமுடியும் என்ற நிலையில் நத்தமேடுஅருந்ததியர் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத ஊராட்சி நிர்வாகமோ காலம்காலமாக புறக்கணித்து வருவதாகஅக்கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வாக்களிக்க முடியாத அருந்ததிய மக்கள்
இதேபோல், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தல் ஆகிய எந்ததேர்தல் நடந்தாலும் நத்தம் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க முடியாது. ஏன் என்றால் நத்தமேடு கிராமத்தில் உள்ள மாற்றுசமூகத்தினர் ஒரு குறிப்பிட்ட கட்சியில் மட்டுமே உள்ளனர். அதனால்மாற்றுக் கட்சியின் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவே உள்ளே விடாதநிலை இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு எந்த கட்சியின் வேட்பாளர்களும் வந்து வாக்கு சேகரிப்பதில்லை. இதனால்வாக்குசேகரிக்க வரும் அரசியல் கட்சிகளிடம் இம்மக்கள் தங்களுடைய குறைகளையும் சொல்ல முடிவதில்லை. இதனால் வெற்றிபெற்ற கட்சியினரும் இவர்கள் வசிக்கும் பகுதிக்கு வருவதில்லை. இந்நிலை நீண்ட ஆண்டுகாலம் நீடித்து வருகிறது.மேலும் நத்தமேடு அருந்ததியர் மக்கள் தேர்தலின்போது நத்தமேடு அரசு பள்ளியில் வாக்களிக்க வேண்டும். வாக்களிக்க வரும் அருந்ததிய மக்களின் விரல்களில் மை மட்டும் வைத்துவிட்டு இம்மக்களை வாக்களிக்க விடாமல் ஆதிக்க சமூகத்தினரே வாக்களித்து விடுவதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டை அம்மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படியே வாக்களிக்க விட்டாலும் இந்த சின்னத்துக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என மிரட்டப்படுவதாகவும், சிலநேரங்களில் எந்த சின்னத்துக்கு வாக்களிப்படுகிறது என்பதை ஆதிக்க சாதியினர் பார்வையிடுவதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்.
வாக்குறுதியை மறந்த மாவட்ட நிர்வாகம்
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் தேர்தலில் அருந்திய மக்கள் ஒருகுறிப்பிட்ட சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை என கூறி நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் அருந்திய பகுதி குடியிருப்புகள் மீதுகற்களை எரிந்து வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றினர்.இதனால் அருந்ததியர் மக்கள் பெரும்அச்சமடைந்து அந்த கிராமத்தையேகாலி செய்துவிட்டு குடுமபத்துடன் சுங்கர அள்ளி கிராமத்தில் உள்ள மரத்தடியில் குடியேறி அங்கேயேசமைத்து சாப்பிட்டனர். மேலும், எங்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யவில்லை, விருப்பப்பட்ட கட்சிகளுக்கு சுதந்திரமாகவாக்களிக்க முடியவில்லை. இதனால் நாங்கள் எங்களின் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைப்பதாக அறிவித்தனர்.இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் அம்மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி, சுடுகாட்டுச் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவும், நத்தமேடு அருந்ததியர் மக்கள் சுதந்திரமாக விருப்பப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிக்கும் வகையில் அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் அடிப்படையில் இம்மக்கள் நத்தமேடு கிராமத்துக்கு திரும்பிச் சென்றனர். ஆனால், அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என அம்மக்கள் தெரிவித்தனர்.
தில்லுமுல்லுவை தடுக்க தவறிய தேர்தல் ஆணையம்
இச்சூழலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது நத்தமேடு உள்ளிட்ட 112 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கை வெளியிடப்பட்டதே தவிர தேர்தல் ஆணையம் மேற்கண்ட வாக்குச் சாவடிகளை கவனிக்க தவறிவிட்டது. நத்தமேடு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஆதிக்க சமூகத்தினர் கள்ள வாக்களித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.குறிப்பாக, இந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலர்கள், வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்டியும், அங்கு நடக்கும் தவறுகளை கண்காணிக்கும் சிசிடிவிகேமராவை திருப்பிவிட்டு தில்லுமுல்லு செய்ததும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து நத்தமேடு உள்ளிட்ட 10 சாவடிகளில் முறைகேடு நடந்துள்ளது. எனவே மேற்கண்ட வாக்குச்சாவடிகளுக்கு தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் என திமுகஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளது.
ஜனநாயகத்தை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம்
இந்தியநாடு சுதந்திரம் அடைந்து வைரவிழாவை நெருங்கிவரும் சூழலில் நத்தமேடு அருந்ததிய மக்கள்வாக்களிக்கும் உரிமை தொடர்ந்து மறுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. எனவே, நத்தமேடு அருந்ததிய மக்களுக்கு தனிவாக்குச்சாவடி அமைத்து சுதந்திரமாக வாக்களிக்கநடவடிக்கை எடுக்கவேண்டும். முறைகேடு நடந்த வாக்குச்சாவடிகளுக்கு மறுதேர்தல் நடத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுமா தேர்தல் ஆணையம் ?
-ஜி.லெனின்.