தருமபுரி, ஆக.24- அரூர் அருகே உள்ள குப்பை கிடங்கினால் கிராம மக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குப்பைக்கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில் இருந்து கொண்டு வரப் படும்குப்பைகள் மாவேரிப்பட்டியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகின்றன. அங்கு மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து விடுகின்றனர். இதனால் துர்நாற்றத்துடன் கரும்புகை ஏற்பட்டு சுமார் 5 கி.மீ தூரம் வரை உள்ள பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் மாவேரிப்பட்டி உள்ள ஏரி, கல் ஏரி, சாமி ஏரி உள்ளிட்ட மூன்று ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயில் குப்பைக் கிடங்கு கழிவுகளை கொட்டப்படுதலால், மாவேரிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் நிலத்தடி நீர் மாசடை கின்றன. இந்நிலையில் குப்பை கிடங்கினால் மக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனையடுத்து மாவேரிப் பட்டி, உடையானூர் மற்றும் மாவேரிப்பட்டி புதூர் ஆகிய கிராம பொதுமக்கள் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யவேண்டு மென மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.