tamilnadu

img

மத்திய அரசின் மேல்முறையீடு மனுவை திரும்பப் பெறக்கோரி எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூன் 4-சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைதிட்டத்தில் மத்திய பாஜக அரசு மேல்முறையீடு மனுவைத் திரும்பப் பெறக்கோரிபாப்பிரெட்டிப்பட்டி அருகே எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம்- சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி மதீப்பிட்டில் எட்டு வழிச் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்து அதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியை அதிகாரிகள் துவக்கினர். ஆனால், இத்திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே விவசாயிகள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர். இருப்பினும், இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்ற அடிப்படையில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தும் பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், எட்டுவழிச் சாலை திட்டத்தின் பணிகளுக்காக நிலத்தை கையகப்படுத்த தடை விதித்திருந்தது. இதனால் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சேலம்- சென்னை இடையிலான எட்டு வழி சாலை திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய பாஜக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. எனவே,மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவைதிரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி செவ்வாயன்று தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி  அருகே காளிப்பேட்டையில் எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்திற்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகி மாரப்பன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் கே.பழனியப்பன், மூர்த்தி, செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.