விவசாயிகள், ஆன்லைனில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தருமபுரியில், இன்று (ஆக. 17) கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை அதியமான் கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். இத்திட்டம் மூலம், அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை கடன் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.