தீண்டாமையைத் தோலுரிக்கப் புறப்பட்ட கலைப் பயணம்
1998இல் வேலூர் கோட்டை மைதானத்தில் ஒரு குறும்படம், பார்த்தவர்களை உலுக்கிப் போட்டதை, அவர்களது மனசாட்சியோடு நடத்திய உரையாடலை மறக்க முடியாது. இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் சங்கத்தின் பத்தாவது மாநில மாநாட்டின் பொது நிகழ்வைப் பொதுவெளியில் நடத்துகையில் உரை வீச்சுகளுக்கு முன்னதாக, ஐஏஎஸ் அதிகாரி - இயக்குநர் ஞான ராஜசேகரனின் ‘ஒரு கண் இரு பார்வை’ குறும்படம் திரையிடப்பட்டது. 1995இல் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் கட்டி நாயக்கன்பட்டி பள்ளிக்கூடத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த தனம் என்ற சிறுமி விளை யாட்டுக் களைப்பால் தாகத்தைத் தணித்துக் கொள்ள பள்ளியின் நடைமுறையை மீறி ‘தானாகக் குவளையை எடுத்துப் பானையில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்ததற்காக’ ஆசிரியரால் பிரம்படிக்கு உள்ளாகித் தனது ஒரு கண்ணில் பார்வையை நிரந்தரமாகப் பறிகொடுத்த கொடுமையைப் பேசி இருந்தது. அது 30 ஆண்டுகளுக்கு முந்தைய செய்தி. இப்போது என்ன மாற்றம் நிகழ்ந்துவிட்டது...
எத்தனை யெத்தனை வடிவங்களில்..
கற்பனைக்கு அப்பாற்பட்ட வடிவங்களில் இன்னமும் நிலவுகிறது தீண்டாமை. தேநீர் குடித்துவிட்டு, ‘டீ நல்லா இருக்குண்ணே’ என்று பாராட்டிய கொடுமைக்காக, நீயெல்லாம் என்ன சான்றிதழ் தரவேண்டி இருக்கு என்று சாதீய வசைக்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆளானது, மழைக்காக சுடுகாட்டுக் கொட்டகையை அண்டி நின்ற பாவத்திற்காகத் தாக்கப்பட்டது, சாதி இந்து திருமண ஊர்வலத்தை வேடிக்கை பார்த்த குற்றத்திற்காகப் புரட்டி எடுக்கப்பட்டது, ‘கண்டா வரச் சொல்லுங்க’ எனும் திரைப்பாடலை அலை பேசியில் ரிங் டோனாக வைத்த ‘திமிருக்காக’... என்று அண்மைக் காலத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் எதிர்கொள்ளும் வன்கொடுமை களைப் பற்றிப் பதிவில் குறிப்பிட்டிருந்தார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ். கலையும் இலக்கியமும் பளிச் என்று ஒரு கண்ணாடி போல் சமூகத்திற்கு எதிரே அதன் முகத்தைக் காட்டும். தகழி சிவசங்கரன் பிள்ளையின் தோட்டியின் மகன் நாவல் படித்துப் பல நாள் உறக்கமிழந்தவர்கள் உண்டு. இந்திய முற்போக்கு இலக்கிய முன்னோடிகளில் ஒருவா ன முல்க் ராஜ் ஆனந்தின் ‘தீண்டத்தகாதவன்’ பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. இமையத்தின் ‘பெத்தவன்’ கதை, திவ்யா இளவரசன் நிஜ வாழ்க்கையில் நேர்ந்த செய்தி களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும். ‘இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கம் இட்டு இருக்குதோ’ என்று சாதியத்தை சவுக்கால் அடித்த சித்தர் சிவ வாக்கியர் கவிதை வரிகள் காலம் கடந்து நின்று பேசிக் கொண்டிருக்கின் றன. ‘தனி கிளாசில் டீ கொடுக்க, பொது கிளாசில் டீ கேட்கத் தொடர்ந்து நடந்த சண்டை யில் ஒரு டீயின் விலை ஒன்பது உயிர்கள்’ என்ற கந்தர்வனின் கவிதை எப்போது வாசித்தா லும் அதிரவைக்கும். ‘என்னோடு எந்த விளையாட்டில் ஆட்டத்திற்குச் சேரும்போதும், தோற்றுப் போகிற வேளையில் எப்படியோ உனக்கு நினைவு வந்துவிடுகிறது என் சாதி’ என்ற ம.தி சாந்தன் கவிதையும் சரி, ‘சாணிப்பால் ஊற்றி சவுக்கால் அடித்தான் என் பூட்டனை உன் பூட்டன்’ என்று தொடங்கும் ராசை. கண்ம ணிராசாவின் வலி கவிதையும் சரி எண்ணற்ற கேள்விகளை வாசகரிடம் தோற்றுவிக்கும்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 18 ஆண்டுகள்
தனது பட்டமேற்படிப்புக் காலத்திலேயே அமெரிக்க பல்கலை.யில் ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் ஆய்வுக் கட்டுரையை அதிரடியாக வழங்கிய டாக்டர் அம்பேத்கர், சாதீயப் படிநிலைகள், படிப்படியான அசமத்துவத் தன்மைகளை பளிச்சென்று அடையாளப்படுத்தினார். சாதீய வன்கொடுமை களுக்கு எதிரான போராட்டங்களை சமூகம் பல்லாண்டுகளாகப் பார்த்துவருகிறது. சாதீய எல்லைகளுக்கு அப்பால் நின்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக விடுதலைக்கான குரலையும், சாதியற்ற சமூகத்திற்கான முழக்கத்தையும் எழுப்பும் முக்கிய கடமையை 2007இல் உதயமான தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்தது. 18 ஆண்டுப் பயணத்தில் திரும்பிப் பார்க்கையில் அளப்பரிய பணிகளை அது ஆற்றி வந்து கொண்டிருக்கிறது. ‘கொஞ்சமோ பிரிவினைகள், ஒரு கோடி என்றால் அது பெரிதாமோ’ என்ற மகாகவியின் சொற்களைப் போல், இரட்டைக் குவளை பிரச்சனை மட்டுமல்ல, சொல்லவே கூசும்படி யான விதங்கள் உள்ளிட்டு நூறு விதமான வடிவங்களில் தீண்டாமை, தமிழகத்தின் பல்லாயிரம் சிற்றூர்களில் இன்னும் நிலவி வருவதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆய்வு சமூகத்தின் முகத்தில் அறைந்து சொல்லியது. பஞ்சமி நில மீட்பு, தீண்டாமைச் சுவர் இடிப்பு, பேருந்து நிறுத்தம், சுடுகாட்டுப் பாதை உரிமை என்று எண்ணற்ற விஷயங் களை தீண்டாமை ஒழிப்பு முன்னணி கையிலெடுத்து மாற்றங்களைக் கொணர வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. அருந்ததியர் உள் ஒதுக்கீடு மிகப்பெரிய சாதனை. உள்ளாட்சித் தலைவரே ஆனாலும் சுதந்திர தினக் கொடியை ஏற்றும் உரிமை கூட மறுக்கப்பட்டிருந்த தலித் தலைவர்களுக்கு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தான் நியாயம் கிடைத்ததைப் பார்க்கிறோம். அதற்கான வழி பிறக்க வைத்ததில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முக்கிய பங்களிப்பு இருந்தது. காவல்நிலைய மரணங்கள், ஆதிக்க சக்திகளின் தூண்டுதலில் தொடுக்கப்படும் பொய் வழக்குகள், அத்து மீறிய அதிகாரத்தின் அராஜக தாக்குதல்கள் என்று நாள் தவறாது ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் துணிந்து நேரே சென்று ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. பாதிப்புறும் குடும்பங்களை அரவணைத்து நியாயத்திற்கான தொடர் போராட்டங்களை இடையறாது நடத்திக் கொண்டிருக்கிறது. தலித் மக்களுக்காக மட்டுமல்ல, இடைநிலை சாதியினர் மத்தியில் உள்சாதி முரண்பாடுகள், மோதல்களில் கூட நியாயத்திற்கான நியாயமான தலையீட்டை வெற்றிகரமாகச் செய்திருக்கும் வரலாறு, தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு உண்டு. பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவருக்கான சிறப்புத் திட்டம் உருவாக்குவதில் இருந்து இப்போது தமிழ்நாட்டைப் பெரிதும் கவலைக்கு உள்ளாக்கிவரும் சாதி ஆணவக்கொலை தடுப்பு சிறப்பு சட்டத்திற்கான பெரும் போராட்டத்தை முன்னெடுப்பது வரை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சுவடுகள் முக்கிய மானவை. திவ்யா இளவரசன், கௌசல்யா சங்கர்... என்று வளர்ந்து கவின் செல்வ கிருஷ்ணா படுகொலை வரை சமூக பதட்டத்தைத் தொடர்ந்து உருவாக்கும் சாதீய பிரிவினை சக்தி களுக்கு எதிராகத் தான் ‘சாதியம் தகர்ப்போம், மனிதம் வளர்ப்போம்’ என்ற முழக்கத்தோடு ஆகஸ்ட் 31-செப்டம்பர் 1 தேதிகளில் மயிலாடு துறையில் தனது ஐந்தாவது மாநில மாநாட்டை நடத்த இருக்கிறது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி.
மாபெரும் கலைப் பயணம்
சாதியும் வர்க்கமும் கலந்த சமூக அமைப்பின் அடித்தளம் பற்றிய புரிதலோடும், பார்வையோடும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி வந்துள்ள அதன் பயணத்தை மாநில மக்களிடையே கலைப் பயணத்தின் மூலம் எடுத்துச் சொல்லும் புதிய பரிமாணம் ஆகஸ்ட் 16 அன்று தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. மிக நெடிய கலைப்பயணத்தில் இருக்கும் சென்னை கலைக்குழு பத்து நாள் தொடர் நிகழ்வுகளாகத் தனது பட்டாங்கில் உள்ளபடி, இடம், அம்மா, மெய் எனும் முக்கிய கலைப் படைப்புகளை தெற்கில் தொடங்கி மேற்கு வழியாக வட மாவட்டங்களைத் தொட்டுக் கிழக்கே தஞ்சை மாவட்டத்தில் ஆகஸ்ட் 25 அன்று நிறைவு செய்ய இருக்கிறது என்பது உற்சாகம் அளிக்கும் செய்தியாகும். நாற்பது ஆண்டு களுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அசாத்திய மான முயற்சிகளை வீதி நாடகங்களில் முன்னெடுத்திருப்பது சென்னை கலைக்குழு. வீதி நாடகத் துறையில் ஆழமான தடம் பதித்துள்ள பிரளயன் நெறியாள்கையில் இந்த நாடகங்கள் பொதுவெளியில் மக்கள் மத்தியில் மிகப் பெரிய கவனத்தையும் சலனத்தையும் ஏற்படுத்த வல்லவை. தியாகி விஸ்வநாத தாஸ் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக அன்றைய கால கட்டத்தில் மற்ற நடிகையர் அவரோடு மேடையேறத் தயங்கிய பொழுதில் அதையுடைத்துத் தான் நடிக்கப் புறப்பட்ட கே.பி.ஜானகியம்மாள் தனது வாழ்க்கை நெடுக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே குரல் கொடுத்ததைப் பேசும் ‘அம்மா’ நாடகம். ஆளுநர் ரவி காவி போர்த்த முயன்று தோற்ற வள்ளலார் உள்ளபடியே யார் என்பதை அவரது பாடல் ஆதாரங்களோடு இசை நாடகமாக முன்னிறுத்தும் ‘மெய்’ நாடகம். நடப்பு கால சமூக அவலங்களைத் தோலுரிக்கும் ‘பட்டாங்கில் உள்ளபடி’, ‘இடம்’ நாடகங்கள்! தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டுக்கான மிக நேர்த்தியான முன்னோட்டமாக துவங்கியுள்ளது. நம்பிக்கை வெளிச்சத்தை நோக்கிய திசை வழியில் சமூகத்தை நகர்த்தப் புறப்படும் முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறும்.