தருமபுரி, பிப். 2- வேலைவாய்ப்பைப் பறிக்கும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்ய அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் தருமபுரி பெரியார்மன்றத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் வரவேற்றார். மாநில தலைவர் மு.அன்பரசு, மாநில பொதுச்செயலாளர் ஏ.செல்வம், மாநில பொருளாளர் எம்.பாஸ்கரன், மாநில துணைத்தலைவர் ஜி.பழனியம்மாள், மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். மேலும், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் எஸ்.இளவேனில், தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் அண்ணா குபேரன், சங்க மாநில தலைவர் பி.பிரபாகரன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.எம்.நெடுஞ்செழியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில் கடந்த 2019 ஜாக்டோ-ஜியோ அமைப் பின் போராட்டத்தின் போது ஊழியர்கள் மீது பொய்வ ழக்கு, 17-பி குற்ற குறிப்பாணை, பணிமாறுதல், பதவி உயர்வு மறுப்பு உள்ளிட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர், வருவாய் கிராம உதவியாளர், எம்.ஆர்.பி.செவிலியர் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.