tamilnadu

விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கக்கூடாது  பென்னாகரம் பகுதி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

 பென்னாகரம், ஜூன் 29- பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபையில், விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நாடாளுமன்ற தேர்தலால் கடந்த மே மாதம் நடைபெற வேண்டிய கிராம சபை ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 28ஆம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டுன. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 33 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டங்களில் பெரும்பான்மையான கோரிக்கையாக குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதேபோல் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் உடனடியாக வேலை வழங்க வேண்டும் எனவும், வேலை செய்த நாட்க ளுக்கு நிலுவையிலுள்ள கூலியை உடனடியாகத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் கிராமப்புறங்களில் பழுதடைந்து கிடைக்கும் சாலை களை உடனடியாக செப்பனிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. செம்மனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க கூடாது. விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் புதை வழித்தடங்கள் மூலம் மின்சாரத்தைக் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.