தருமபுரி, ஜூலை 5- தருமபுரி - மொரப்பூர் ரயில்வே இணைப்பு பாதை திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ்கோயலை நேரில் சந்தித்து மனு அளித்தார். அம்மனுவில் கூறியிருப்பதாவது: மொரப்பூர்- தருமபுரி ரயில்வே இணைப்பு பாதை திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடந்தது. அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் உள்ளது. அந்த பணிகளை விரைவுபடுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த ரயில்வே இணைப்பு பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், ரயில்வே இணைப்பு திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.