திருவனந்தபுரம்:
வெளிநாடுகளில் உள்ள மலையாளிகளுக்கு கொரோனா குறித்து ஆன்லைனில் மருத்துவ சேவைகள் வழங்க ஆயிரம் மருத்துவர்கள் தயாராக உள்ளனர். இந்த சேவை துவக்கப்பட்ட முதல் நாளில் (வெள்ளி) 150 பேர் மருத்துவர்களை தொடர்பு கொண்டனர்.
வெளிநாடுகளில் கடும் பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தி வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனா வுக்கு பலியாகி உள்ளனர். அதே நேரத்தில் கேரள மருத்துவர்கள் வெளிநாட்டினர் உட்பட நூற்றுக்கணக்கானோரை நோயின் பிடியிலிருந்து மீட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கு ஆன்லைனில் மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் இருதினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
அதன்படி நோர்கா ரூட்ஸ் என்கிற கேரள அரசின் வெளிநாடு வாழ்வோருக்கான நிறுவனத்தின் மூலம் வெள்ளியன்று இந்த சேவை துவக்கப்பட்டது. முதல் நாளிலேயே 150 பேர், மருத்துவர்களை ஆன்லைனில் தொடர்பு கொண்டனர். காணொலி அல்லது தொலைபேசி மூலம் பேசியவர்களுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த சேவையை அதிகமானோர் நாடுவதால் விரிவுபடுத்த உள்ளதாகவும், ஆயிரம் மருத்துவர்கள் இதற்கு தயாராக உள்ளதாகவும் நோர்கா தெரிவித்துள்ளது.
www.norkaroots.org என்கிற வலைத்தளத்தில் பதிவு செய்து பிரச்சனைகளையும், தேவைப்படும் உதவிகளையும் தெரிவிக்கலாம். ‘டாக்டர் ஆன்லைன்’ என்கிற தலைப்பின் கீழ் உள்ள குறியீட்டை அழுத்தினால் மருத்துவரின் ஆன்லைன் ஆலோசனைக்கான நேரம் குறித்த தகவல் கிடைக்கும். ‘ஹலோ டாக்டர்’ என்கிற தலைப்பின் கீழ் உள்ள குறியீட்டை அழுத்தினால் தொலைபேசியில் தொடர்பு கொள்ள பல்வேறு சிகிச்சைகளுக்கான மருத்துவர்களின் பெயர் விவரங்கள் வழங்கப்படும். இந்திய நேரம் பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மருத்துவர்களை தொடர்பு கொண்டு சேவைகளை பெறலாம்.
வளைகுடா நாடுகளில் கொரோனா உதவி மையம் (ஹெல்ப் டெஸ்க்) கடந்த இரண்டு நாட்களாக செயல்பட்டு வருகின்றன. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு சிறப்பு அனுமதி பெற்று மலையாளிகளின் அமைப்புகளும், தன்னார்வலர்களும் கேரள அரசுக்காக இந்த உதவி மையங்களை தொடங்கி உள்ளனர். புஜைரா, மற்றும் ராஸ் அல் கைமா, சார்ஜா, அல்பென், துபாய், அபுதாபி, ஓமன் ஆகிய இடங்களில் உதவி மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. மற்ற வளைகுடா நாடுகளிலும் துவக்க உள்ளதாக நோர்கா தெரிவித்துள்ளது.