கொரோனா தாக்கத்தையொட்டி அமல் படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் சுமார் 12 கோடிப்பேர் வேலையிழந்தனர். இவர்களில் பாதுகாப்பான-மாதச்சம்பள வேலைகளில் இருந்தவர்கள் மட்டும்1 கோடியே 89 லட்சம் பேர். இவர்கள் புதிய வேலைகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில், இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புக்கான சூழல் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு மோசமாக உள்ளதாக ‘மேன்பவர் குரூப்’என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.மொத்தம் 813 நிறுவனங்களிடம் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் வெறும் 3 சதவிகித நிறுவனங்கள் மட்டுமே அடுத்த 3 மாதங்களில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்க திட்டம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள்- அதாவது 54 சதவிகித நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதில்லை எனக் கூறியுள்ளன. 42 சதவிகித நிறுவனங்கள் எதிர்கால சூழல் குறித்து நம்பிக் கையற்று உள்ளதாகக் கூறியுள்ளன. 3 சதவிகித நிறுவனங்கள் ஆட்களைக் குறைக்க உள்ளதாகக் கூறியுள்ளன.