கடலூர்:
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயண குழுவிற்கு பல்வேறு இடங்களில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தவும், போதையற்ற, வன்முறையற்ற தமிழகத்தை உருவாக்கிடவும், பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைத்திடவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராக சட்டமியற்றக் கோரியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் கோட்டை நோக்கி நடைபயணம் நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான செவ்வாயன்று (நவ.26) காலை 8 மணிக்கு தொடங்கிய பயணக்குழுவிற்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வழி நெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணக்குழுவின் தலைவரும், மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி தலைமையிலான குழுவில் அகில இந்திய துணைத்தலைவர்கள் உ.வாசுகி, சுதாசுந்தர்ராமன், மத்தியக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், மாநிலச் செயலாளர் வி.பிரமிளா, மாநில நிர்வாகிகள் ஆர்.சசிகலா, எஸ்.தமிழ்செல்வி, எஸ்.கீதா, ஜி.ராணி, வி.சந்திரா, எஸ்.பாக்கியலட்சுமி, வி.மேரி,கடலூர் மாவட்டத் தலைவர் பி.முத்து லட்சுமி, செயலாளர் பி.தேன்மொழி, துணைத்தலைவர் ஆர்.சிவகாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.
சமையல் அறை கடந்து சாலைகளில்...
சிகப்பு, வெள்ளை நிற சீருடையோடு புதுமை பெண்கள் சமையல் அறை கடந்து, அச்சம் தவிர்த்து, அடக்குமுறைகளை உடைத்தெறிந்து, காலில் ஏற்பட்ட கொப்புளங்களின் வலிகளோடு சரித்திரம் படைக்க சாலைகளில் நடக்கின்றனர். ஆதிபராசக்தி ஆலயத்திற்கும், மேல்மலையனூர் அங்காளம்மனுக்கும், அன்னை வேளாங்கண்ணிக்கும் நடந்து சென்ற பெண்களை பார்த்து பழக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களுக்கு மாதர் சங்கத்தின் நடைபயணமும் அதில் ஒலிக்கும் கோரிக்கைகளும் வித்தியாசமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது. நடைபயண விபரங்களைக் கேட்டுச் சென்றதோடு சிலர் பயண செலவிற்கான நிதியையும் வழங்கிச் சென்றனர்.காடாம்புலியூரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சி சிஐடியு மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் செயலாளர் திருமுருகன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அண்ணாகிராமத்தில் பெண்கள் அனைவருக்கும் ரோஜா மலர் கொடுத்து வரவேற்ற
னர். அந்தபகுதியில் சாகுபடி செய்யக்கூடிய கொய்யா பழங்கள், இளநீர் பயணக்குழுவினருக்கு வழங்கினார்கள். பாடகி மணிமேகலை, தவில் விநாயகம், ஆகியோரின் கிராமிய பாடல்களை பாடி வரவேற்றனர். பயணக்களைப்பு தீரவும், கால் வலிஆறவும் தலைவர்களுடன் பயணக்குழு வினர் நடனமாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர் லோகநாதன், வாலிபர்சங்க மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், ரூபிகா, விவசாய சங்கச் செயலாளர் முருகன், கைத்தறி சங்க செயலாளர் ரங்கநாதன், கரும்பு சங்கச் செயலாளர் ஆதவன்ஆகியோர் கலந்து கொண்டனர். மதிமுக ஒன்றியச் செயலாளர் பயணக்குழு தலைவர்களுக்கு கதராடை அணிவித்தார்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் வரவேற்பு
மேல்பட்டாம்பாக்கத்தில், கிறிஸ்தவ பாதிரியார்கள் புஷ்பராணி ஜோஸ்லா தலைமையில் வரவேற்பளித்தனர். கதராடைஅணிவித்து அனைவருக்கும் குளுக்கோஸ் பவுடர் பாக்கெட்டை வழங்கி னார்கள். பட்டாம்பாக்கத்தில் நடைபெற்ற வரவேற்புக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் ஜெயபாண்டியன், வாலிபர் சங்கத்தின் விஜி, மாதர் சங்கத்தின் ஜெயபிரதா ஆகியோர் கலந்து கொண்டனர்.நெல்லிக்குப்பத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பயணக்குழுவை வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர்கள் ஜி.மாதவன், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், கற்பனைச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வரவேற்பளித்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட 2வது நடைபயண குழுவினர் செவ்வாயன்று கலசபாக்கம், குருவிமலை, வசூர், போளூர், வடபாதி மங்கலம் ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து போதைக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க மத்திய மாநில அரசுகள் எடுக்கவேண்டிய நடவடிக்கைகளையும் எடுத்துரைத்தனர்.மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநில துணைத்தலைவர் கே.பாலபாரதி, மாநில நிர்வாகிகள் எஸ். கே. பொன்னுத்தாய், எஸ்.டி. சங்கரி, எஸ்.ராணி, ஏ.ராதிகா, ஜி.கலைச்செல்வி, எஸ்.லட்சுமி, உஷாராணி, மாவட்டச் செயலாளர் எஸ்.லூர்துமேரி, மாவட்டத் தலைவர் எஸ்.செல்வி உள்ளிட்ட பலர் இந்த நடைபயணத்தில் பங்கேற்றுள்ளனர்.நடைபயண குழுவினருக்கு, மாவட்டம் முழுவதிலும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிஐடியு, மின் ஊழியர் மத்திய அமைப்பு, மாதர், மாணவர் அமைப்புகளின் சார்பில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.