நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் 10 நாடுகள் விளையாடி வருகின்றன. கிரிக்கெட்டின் ஆட்டமுறை ஒரே மாதிரியாக இருந்தாலும் ரசிகர்களின் மனநிலை வேறுபட்டு இருக்கும். 10 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் குணத்தில் வித்தியாசமானவர்கள் என்பதால் அவர்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்து
போட்டியை நடத்தும் இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் நீதிமன்ற நீதிபதி போல அமைதியாக இருக்கையில் அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள். சதமடித்தது சொந்த நாட்டு வீரராக இருந்தாலும் சரி, எதிரணி வீரராக இருந்தாலும் சரி எழுந்து நின்று மரியாதை உடன் கைதட்டுவார்கள். ரசிகர்கள் என்றால் இவர்களைப் போன்று இருக்க வேண்டும்.
இந்தியா, இலங்கை
அமைதியாக இருக்கமாட்டார்கள். கையில் மிகப்பெரிய கொடி, உடம்பில் வர்ணப்பூச்சு, தலையில் அலங்காரம் எனத் திருமணக் கோலம் போன்று வித்தியாசமாக மைதானத்திற்கு வருவார்கள். விக்கெட், சதம் போன்ற நிகழ்வுகளுக்கு மின்வயரில் காலை வைத்தாற் போலத் துள்ளுவார்கள். ஆனால் தேசப்பற்றில் இந்த இரு நாட்டு ரசிகர்களை வேறு எந்த நாடும் மிஞ்ச முடியாது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான்
மைதான இருக்கைகளில் பெரும்பாலும் அமர மாட்டார்கள். தங்கள் நாட்டு வீரர்கள் சொதப்பினால் கடிந்து கொள்வார்கள். வெற்றி கொண்டாட்டம் என்றால் வேற்றுகிரகவாசிகளுக்கு கேட்கும் வரை பிளிறுவார்கள்.
தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா
மது இல்லாமல் ஆட்டத்தை ரசிக்க மாட்டார்கள். அரைகுறை ஆடையுடன் மைதானத்தை வலம் வருவார்கள். குடிப்பழக்கம் மட்டும் தான் இவர்களின் கெட்ட செயல். மற்ற படி எந்த தொல்லையும் தர மாட்டார்கள்.
விண்டீஸ்
இவர்களுக்கு கையும், காலும் சும்மா இருக்காது. பீப்பி (ஊதுகுழல்) வைத்துக்கொண்டு மைதானத்தை அதிர வைப்பார்கள். இருக்கைக்கு அருகில் சற்று இடம் இருந்தால் நடனம் ஆட ஆரம்பித்து விடுவார்கள். சேட்டைகள் செய்வதில் பலே கில்லாடி என்பதால் மற்ற 9 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கு இவர்களின் சேட்டை பிடிக்காது.