ஆறாவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 1996-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்டத்தில் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) நடைபெற்றது. முந்தைய உலகக்கோப்பை தொடரைப் போன்று அதிக மாற்றங்கள் செய்யாமல் அணிகளின் எண்ணிக்கையை மட்டும் 12 ஆக உயர்த்தப்பட்டது. புதிய அணிகளாக ஜிம்பாப்வே, ஐக்கிய அரபுஅமிரகம், நெதர்லாந்து, கென்யா போன்ற வை களமிறங்கின. கத்துக்குட்டியாக இருந்தாலும் இந்த 4 அணிகள் சிறப்பாக விளையாடின. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி துவங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.இதில் பலர் மாண்டதால் பாதுகாப்பு பிரச்சனையைக் காரணம் காட்டி ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் இலங்கைக்கு வர மறுத்ததால் இலங்கை அணிக்குப் புள்ளிகள் வழங்கப்பட்டன. நிறுத்தப்பட்ட இரண்டு போட்டிகளுக்குப் பதிலாகச் சிறப்புக் காட்சிப் போட்டிக்கு ஐசிசி ஏற்பாடு செய்தது.இந்த ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் ஒரு அணியாக இலங்கை அணியை எதிர்த்து விளையாடினர். இந்தியாவின் சச்சின் - பாகிஸ்தானின் அமிர் சோஹைலும் இணைந்து துவக்க ஜோடியாக களமிறங்கி ஆடியது கிரிக்கெட் வரலாற்றில் அதிசய காட்சியாகக் கருதப்படுகிறது.
முதல் 15 ஓவர்களில் எல்லைக் கோட்டுக்கு அருகே அதிகம் பேர் நிற்பதை மாற்றியமைத்ததைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இலங்கை அணியின் துவக்க ஜோடியான சனத் ஜெய சூர்யா-கலுவிதரண ஜோடி டாப் ஓவர்களில் ரன் மழை பொழிந்தனர்.இந்தியாவுக்கு எதிராக 117 ரன்களும்,கென்யாவுடன் 123 ரன்களும்,இங்கிலாந்துக்கு எதிராக 121 ரன்களும் எடுத்து பந்துவீச்சாளர்களை மிரளவைத்தனர்.“ஏ” பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி தொடக்க முதலே சிறப்பாக விளை யாடியது. காலிறுதியில் பரம எதிரியான பாகிஸ்தானை 39 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.அரையிறுதியில் இலங்கை அணியின் அசத்தலான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 131 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியுடன் வெளியேறியது. சூப்பர் பார்முடன் தோல்வியைச் சந்திக்காமல் காலிறுதியில் நுழைந்த தென் ஆப்பிரிக்க அணி, காலிறுதியில் மேற்கு இந்திய தீவுகள் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.பாகிஸ்தானின் முக்கிய நகரான லாகூரில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதின. உலகப் போரைப் போன்று பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும்ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப் படுத்தியதால் லாகூர் மைதானமே இமைகள் அசையாமல் போட்டியை உற்றுநோக்கின.
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டு களுக்கு 241 ரன்கள் எடுத்தது.242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி மிடில் ஆர்டர் வீரர் டி சில்வாவின் அசத்தலான ஆட்டத்தால் வெற்றி இலக்கை (245 ரன்கள்) எளிதாக எட்டி முதன்முறையாக உலகக்கோப்பையை முத்தமிட்டது. இதில் முக்கியமான சம்பவம் என்னவென்றால் தனது தாய்நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலர் பலியான விவகாரத்தைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் நாட்டுப்பற்றுடன் கோப்பையைக் கைப்பற்றிய இலங்கை அணியை நினைத்து கிரிக்கெட் உலகமே வியந்தது. 1987-உலகக்கோப்பைக்கு முன்பு விருந்தாளி போன்று வருவதும், செல்வதுமாக இருந்த ஆஸ்திரேலிய அணி 1996-ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின்னர் வலுவான அணியாக கம்பீர நடை போட்டு கிரிக்கெட் உலகை மிரட்டியது.